16 வயது சிறுமியை மணமுடித்த 31 வயது இளைஞர்- விரக்தியில் தூக்கில் தொங்கி தற்கொலை

கன்னியாகுமரி மாவட்டத்தில் 16 வயது சிறுமியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியின் போது, அதிகாரிகள் குறுக்கிட்டு மணப்பெண்ணை பிரித்துச் சென்றதால், அவமான ம் அடைந்த புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கண்ணியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பாறவிளையை சேர்ந்தவர் வினு (வயது 31), கட்டிட தொழிலாளி. இவருக்கும், தக்கலை அருகே கோழிப்போர்விளையை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் திருமணம் செய்ய இரு வீட்டாரும் பேசி முடிவு செய்து நேற்று முன்தினம் காலையில் இருவருக்கும் அப்பகுதியில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் நடந்துள்ளது.

மாலையில், மார்த்தாண்டத்தில் உள்ள மணமகன் இல்லத்தில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி அங்கு மேடையில் மணமக்கள் அமர்ந்திருந்தனர். உறவினர்களின் வருகையால் திருமண வீடு களைகட்டியிருந்தது.

இந்நிலையில், மணப்பெண்ணுக்கு 16 வயதே ஆவதாக மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரி குமுதாவுக்கு தகவல் கிடைக்கவே, உடனே, அவர் சமூக நல அதிகாரி பியூலா, சைல்டு லைன் அமைப்பினர் திருமண வீட்டுக்கு விரைந்து சென்று அங்கு மணப்பெண்ணிடம் விசாரணை நடத்திய போது அவருக்கு 16 வயதே ஆவது தெரிய வந்தது.

இதனால், உடனே திருமண வரவேற்பு நிகழ்ச்சியை அதிகாரிகள் தடுத்து நிறுத்தியுள்ளனர். இதனால் அங்கு திரண்டிருந்த உறவினர்கள் இடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து, வினுவையும், சிறுமியையும் நாகர்கோவிலுக்கு அழைத்து சென்று, சிறுமியிடம் விசாரணை நடத்திய போது, அவர் தான் 10–ம் வகுப்பு வரை படித்து இருப்பதாகவும், தொடர்ந்து படிக்க விரும்புவதாகவும் அவர் கூறியதாக தெரிகிறது. .

இந்நிலையில், சிறுமி தொடர்ந்து படிப்பதற்கான நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்த அதிகாரிகள், அந்த சிறுமி நாகர்கோவிலில் உள்ள அரசு காப்பகத்துக்கு அனுப்பி வைத்துள்ளனர். காப்பகத்திலேயே தங்கி பள்ளி படிப்பை சிறுமி தொடர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் உறுதி அளித்துள்ளனர்.

இதையடுத்து, மணமகன் வினுவுக்கு அறிவுரை கூறி வீட்டுக்கு அனுப்பி வைத்தனர் அதிகாரிகள். ஆனால் திருமணம் தடைபட்ட சம்பவம் வினுவுக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்த நிலையில், சற்று நேரத்துக்கு முன்பு தாலி கட்டிய மனைவி தன்னுடன் இல்லையே என மன உளைச்சலால் வாடிய முகத்துடனே நீண்ட நேரம் இருந்துள்ளார்.

பின்பு, வீட்டுக்கு திரும்பி வந்த சோகத்துடனே இருந்த வினுவின் அறை நேற்று காலையில் நீண்ட நேரமாகியும் திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த பெற்றோர் கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது, வினு மின்விசிறியில் தூக்கு போட்டு பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். மணமேடையில் சிறுமி உடுத்தியிருந்த பட்டு சேலையிலேயே வினு தூக்கு போட்டு கொண்டிருந்ததை கண்டு பெற்றோர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

மேலும், இதுகுறித்து மார்த்தாண்டம் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் வினுவின் உடலை கைப்பற்றியதுடன், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணையும் மேற்கொண்டு வருகின்றனர்.

திருமண வீட்டுக்குள் நுழைந்த அதிகாரிகள் வரவேற்பு நிகழ்ச்சியை தடுத்து நிறுத்தியதால் அவமானம் தாங்காமலும் சிறுமி தனக்கு கிடைக்காத காரணத்தினாலும் புதுமாப்பிள்ளை வினு தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் முதல்கட்ட விசாரணையில் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]