16 நாடுகளின் கடற்படை போர்ப் பயிற்சி 6ஆம் திகதி ஆரம்பம்

16 நாடுகளின் கடற்படைகளை இணைத்துக் கொண்டு, இந்தியா பாரிய கடற்படைப் போர்ப் பயிற்சி ஒன்றை நடத்தவுள்ளது.

இந்தியப் பெருங்கடலில் சீனாவின் ஆதிக்கம் வலுவடைந்துள்ள நிலையில், எதிர்வரும் மார்ச் 6ஆம் திகதி முதல் தொடர்ந்து 8 நாட்கள் இந்தப் பயிற்சி இடம்பெறவுள்ளது.

பிராந்திய ஒத்துழைப்பை விரிவாக்குதல், முக்கிய கடல் பாதைகளில் சட்டவிரோத செயற்பாடுகளுக்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுத்தல் ஆகிய இலக்குகளின் அடிப்படையில் இந்த கூட்டுப் பயிற்சி மேற்கொள்ளப்படவுள்ளதாக இந்தியா அறிவித்துள்ளது.

“மிலன் பயிற்சி” என்ற பெயரில் நடத்தப்படவுள்ள இந்த ஒத்திகை நடவடிக்கை, அந்தமான் நிகோபார் கடற்பகுதியில் இடம்பெறவுள்ளது.

இந்தக் கூட்டுப் பயிற்சியில் இலங்கை, அவுஸ்ரேலியா, மலேசியா, மாலைதீவு, மொரிசியஸ், மியான்மார், நியூசிலாந்து, ஓமான், வியட்னாம், தாய்லாந்து, தன்சானியா, சிங்கப்பூர், பங்களாதேஸ், இந்தோனேசியா, கென்யா, கம்போடியா ஆகிய நாடுகளின் கடற்படைகள் பங்கேற்கவுள்ளன.

இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கம் வலுப்பெற்று வரும் நிலையிலேயே- அதற்கு எதிரான ஒரு நகர்வாகவே இந்தியா இந்தக் கூட்டுப் பயிற்சியை மேற்கொள்ளவுள்ளதாக அரசியல், இராணுவ விமர்சகர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.