15வயது பாடசாலை மாணவி பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி சித்திரவதை- முல்லைத்தீவில் சம்பவம்

வலிகாமம் கல்வி வலயத்திலுள்ள பிரபல பாடசாலையில் கல்வி கற்கும் 15 வயதுடைய மாணவி ஒருவர் பாடசாலைக்குச் செல்லும் வழியில் கடத்திச் செல்லப்பட்டு வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டுள்ளதுடன் சித்திரவதைக்கும் உள்படுத்தப்பட்டுள்ளார்.

மூன்று பேர் கொண்ட கும்பல் முச்சக்கர வண்டியில் மாணவியைக் கடத்திச் சென்று முல்லைத்தீவில் வைத்து கொடுமைப்படுத்தியுள்ளனர்.

“இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் முல்லைத்தீவில் வைத்துக் கைது செய்யப்பட்டார். அவர் மல்லாகம் நீதிவான் முன்னிலையில் முற்படுத்தப்பட்டு வரும் 12ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்” என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் கடந்த வியாழக்கிழமை இடம்பெற்றது. மாணவியைத் தேடி அலைந்த உறவினர்கள் 2 நாள்களின் பின்னர் முல்லைத்தீவுப் பகுதியில் வைத்து பாழடைந்த கொட்டில் வீடொன்றிலிருந்து மீட்டுள்ளனர்.
மாணவி சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார் என்று உறவினர்கள் தெரிவித்தனர்.

சுன்னாகம் பொலிஸ் பிரிவைச் சேர்ந்த மாணவி, கடந்த வியாழக்கிழமை பாடசாலைக்குச் சென்றுள்ளார். எனினும் அவர் வீடு திரும்பாததால் உறவினர்கள் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு வழங்கியுள்ளனர்.எனினும் பொலிஸார் எந்தவொரு நடவடிக்கையை எடுக்காதநிலையில் உறவினர்கள் ஊர் இளைஞர்களுடன் மாணவியைத் தேட ஆரம்பித்தனர்.

ஊர் இளைஞர் ஒருவர் மீது சந்தேகம் கொண்ட இளைஞர்கள் குழு உறவினர்களையும் அழைத்துக்கொண்டு முல்லைத்தீவுக்குச் சென்று அங்கு தேடியுள்ளனர். இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு 10 மணியளவில் மாணவி இருந்த இடம் கண்டறியப்பட்டனர். அங்கு சென்ற உறவினர்கள் மாணவியை காயங்களுடன் மீட்டனர்.

மாணவியை யாழ்ப்பாணம் அழைத்து வந்த உறவினர்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்த்துள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]