14வது சுனாமி நினைவு இலங்கையில் அனுஷ்டிப்பு

14-வது சுனாமி நினைவு தினத்தையொட்டி சுனாமியால் உயிர்களை பறிகொடுத்த சொந்தங்கள் கடற்கரை பகுதிகளில் அஞ்சலி செலுத்தினர்.

கடல்… உலகெங்கும் வியாபித்து இருக்கும் பெரிய நீர்நிலை. எப்போதும் ஓய்வெடுக்காமல் உழன்றுகொண்டே இருக்கும். நீலக்கடலில் இருந்து எழும் வெள்ளை நிற அலை, இடைவிடாது கரையை முத்தமிட்டுக் கொண்டிருக்கும் அழகைக் காண குவியும் மக்களின் எண்ணிக்கைக்கு கடற்கரை மணலில் அவர்கள் பதியவிட்டு செல்லும் காலடித்தடங்களே சாட்சி. இப்படி, ரசிக்க மட்டுமே என்று இருந்த கடல், ஆபத்தானது என்பதை உணர்த்திய ஆண்டு 2004.

14 ஆண்டுகளுக்கு முன்பு டிசம்பர் 26-ந் தேதி அதிகாலை நேரத்தில், இந்தோனேசியாவில் உள்ள சுமத்ரா தீவில் கடலுக்கு அடியில் ஏற்பட்ட பூகம்பத்தால் சுனாமி என்ற ஆழிப்பேரலை கடல் அரக்கனாய் விஸ்வரூபம் எடுத்து, கடற்கரையோர மக்களையும், அவர்களின் உடைமைகளையும் வாரிச் சுருட்டிச் சென்ற கொடிய நாள்.

சுனாமி கடல் அரக்கனின் கோரத்தாண்டவத்துக்கு இந்தியா, இந்தோனேசியா, இலங்கை, தாய்லாந்து, கிழக்கு ஆப்பிரிக்கா, மலேசியா, மாலத்தீவு, மியான்மர், வங்காளதேசம் உள்ளிட்ட நாடுகளில், கடற்கரையோரம் வசித்த 2 லட்சத்து 30 ஆயிரம் மக்கள் பலியானார்கள். தமிழகத்தில் மட்டும் 7,941 பேர் மாண்டு போனார்கள். அதிகபட்சமாக நாகப்பட்டினத்தில் 6,039 பேர் பலியானார்கள். கன்னியாகுமரியில் 798 பேர் இறந்துபோனார்கள். கடற்கரையோரம் குவிந்து கிடந்த பிணங்களை ஒரே குழிக்குள் போட்டு புதைக்க வேண்டிய துர்பாக்கிய நிலை ஏற்பட்டது.

அன்று ஒலிக்கத் தொடங்கிய மரண ஓலம் இத்தனை ஆண்டுகள் கடந்த பின்பும் ஓய்ந்த பாடில்லை. “ஆண்டொன்று போனால், வயதொன்று போகும்” என்று சொல்வார்கள். அன்று… சிறுவர்-சிறுமியாய் மாண்டுபோனவர்கள், இன்றைக்கு உயிரோடு இருந்திருந்தால் இளம் வயதினராய் வலம் வந்திருப்பார்கள். அன்றைக்கு இளம் வயதில் இருந்தவர்கள், இன்று.. திருமணம் முடிந்து குடும்பமாய் பிள்ளைகளோடு வாழ்ந்து மகிழ்ந்திருப்பார்கள். ஆனால், அன்றைக்கு ஆழிப்பேரலையின் கோரப் பசிக்கு இரையானவர்களின் புகைப்படங்கள் இன்றைக்கு அவர்களது வீடுகளில் சுவற்றில் நினைவுச் சின்னமாக தொங்கிக் கொண்டிருக்கின்றன. அதைப் பார்க்கும் போதெல்லாம் மரித்துப்போனவர்களின் ரத்த சொந்தங்களுக்கு கண்களில் கண்ணீர் பொங்கி நிற்கிறது.

2004-ம் ஆண்டு நடந்த இந்த பெரிய இயற்கை பேரிடருக்கு பிறகு, எப்போதாவது இடையிடையே ‘சுனாமி’ என்னும் அரக்கன், கடல் கொந்தளிப்பாக உருவெடுத்து கரையோர மீனவர்களை மிரட்டிக் கொண்டே இருக்கிறான். 2005-ம் ஆண்டு பிப்ரவரி 19-ந் தேதி இந்தோனேசியாவில் ஏற்பட்ட பூகம்பத்தால், கடல் கொந்தளித்து தமிழக கடலோர மாவட்டங்களில் சுனாமி பீதியை கிளப்பியது. மீண்டும் அதே ஆண்டு மார்ச் 28-ந் தேதி, இந்தோனேசியா அருகே ஏற்பட்ட கடுமையான பூமி அதிர்ச்சி காரணமாக சுனாமி பீதி ஏற்பட்டது. தமிழகத்தில் கடலோர பகுதி மக்கள் வெளியேற்றப்பட்டனர். இந்த பூகம்ப தாக்குதலில் இந்தோனேசியாவில் 2 ஆயிரம் பேர் பலியானார்கள். இப்படி, ஆழிப்பேரலையின் மிரட்டல்கள் அவ்வப்போது தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது.

எனவே மக்களின் மனங்களில் சுனாமி ஏற்படுத்திய வடு இன்னும் மறைந்தபாடில்லை. 14-வது சுனாமி நினைவு தினம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. உயிர்களை இழந்த சொந்தங்கள், கடல் தாயிடம் வேண்டி முறையிட்டு கனத்த இதயத்தோடு கடற்மணல் பரப்பில் அஞ்சலி செலுத்துகின்றனர். கடலில் பால் ஊற்றியும் பிரார்த்தனை செய்கின்றனர். இனியும் இதுபோன்ற கோரத் தாக்குதல்கள் தொடர வேண்டாம் என்பதே அவர்களுடைய வேண்டுதலாக உள்ளது.

எந்தவொரு கவலைக்கும் சரியான மருந்து காலத்திடம் தான் இருக்கிறது. எனவே, பாதிக்கப்பட்ட மக்கள் மனதில் சுனாமி ஏற்படுத்திய ஆறாத வடுவையும் காலம் என்ற மருந்து விரைவாக ஆற்றட்டும் என்று இறைவனிடம் நாம் வேண்டுவோம்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]