13ஆவது திருத்தச்சட்டத்தின் அடிப்படையில் மாகாண சபைகளுக்கு பூரண அதிகாரப் பகிர்வு அவசியம்

13ஆவது திருத்தச்சட்டத்தின் அடிப்படையில் மாகாண சபைகளுக்கு உரித்துடைய அனைத்து அதிகாரங்களை பகிர்ந்தளிக்க வேண்டும். அதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பூரண ஆதரவளிக்கும் என்று இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கொழும்பில் உள்ள சில அரசியல்வாதிகள் கிராமத்தில் உள்ள தமிழ்,சிங்கள மக்கள் தொடர்பில் பேசுவதில்லை. கிராமத்தில் சிங்கள பௌத்தர்கள் போன்று தமிழர்களுக்கு உதவி செய்யும் விவசாயிகள் எவரும் இல்லை.
புதிய அரசமைப்பொன்று உருவாக்கப்படுகிறது. அந்தக் குழுக்களில் நானும் செயற்படுகின்றேன். ஆனால், சிலர் அரசமைப்புச் செயற்பாட்டை குழப்புவதற்கே அதில் பணியாற்றுகிறோம் என்கின்றனர். புதிய அரசமைப்பொன்று தேவையில்லை என்பது உண்மைதான். ஆனால், மாநாயக்க தேரர்கள் கூறுவது போன்று அரசமைப்பு மறுசீரமைப்பு கட்டாயம் அவசியமாகும்.

உள்ளூராட்சித் தேர்தலில் விருப்பு வாக்குமுறைமை இல்லை. அதேபோல் நாடாளுமன்றத் தேர்தலிலும் விருப்பு வாக்குமுறையை இல்லாதொழிக்க வேண்டும். தமிழ் பேசும் மக்களும் இந்த நாட்டின் மக்கள்தான். அவர்கள் வானத்தில் இருந்து குதித்தவர்கள் அல்ல. மலையகத்தவர்களும் இலங்கையர்களே. யாழ்ப்பாணத்தில் தமிழ் பேசுபவர்கள் பரம்பரை பரம்பரையாக இங்குள்ளவர்கள். அவர்களுக்கு ஏதும் தவறிழைக்கப்பட்டிருந்தால் அதனை நாம் பார்க்காமல் யார் பார்ப்பது?

நாங்கள் அவர்களை பார்க்காததாலேயே பிரபாகரன் போன்றோர் உதயமாகினர். அதன் காரணமாக 13ஆவது திருத்தச்சட்டத்தின் அடிப்படையில் அனைத்து அதிகாரங்களை பூரணமாக பகிர்ந்தளிக்க வேண்டும். 19ஆவது திருத்தச்சட்டத்தின் பின்னர் ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரம் இல்லாதொழிக்கப்பட்டுள்ளது. பெண்ணை ஆணாக மாற்றும் அதிகாரம் தற்போதில்லை. ஆகவே, தற்போதைய அதிகாரங்களுடன் ஜனாதிபதி முறைமை இருந்தால் பிரச்சினையில்லை.

யாழ்ப்பாணத்தில் பொய் வாக்குறுதிகளை கூறி விக்னேஸ்வரன் போன்றோர் மக்களை தூண்டிவிடுகின்றனர். மக்களின் வாக்குளை வேட்டையாடவே அவர் அவ்வாறு செயற்படுகிறார் என்றார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]