12 ராசிகளுக்கும் ராசிப்படி வரக்கூடிய நோய்கள் இவைகள்தான்- கடகராசிக்காரர்களே கொஞ்சம் ஜாக்கிரதை

நமக்கு வரக்கூடிய நோய்கள் அனைத்தும் ராசிகளால் அல்ல. ஆனால் இந்தந்த ராசிகளுக்கு என்று பொதுவான சிலவகை நோய்கள் உண்டு. அவை என்ன என்பதைப் பார்ப்போம்.

வாழ்வில் மனிதனுக்கு நல்லது நடந்து கொண்டே இருந்தால், ‘எல்லாம் என் ராசி’ என்று மார்தட்டிக் கொள்வார்கள். ‘எதற்குமே ஒரு ராசி வேண்டும். அந்த ராசி இருந்தால் தான் அதிர்ஷ்டம் கூட தேடி வரும்’ என்று கூறுவார்கள்.

இவர்கள் எதையெல்லாம் ராசி என்று கூறுகிறார்கள்?

கை ராசி, முக ராசி, வாய்முகூர்த்த ராசி, கண் ராசி, கண்விழித்த ராசி, பாதம் பட்ட ராசி, தொட்ட ராசி.. இப்படி பல ராசிகள் உண்டு. என்றாலும் ஜோதிடத்தில் கூறப்படும் பன்னிரண்டு ராசிகளில்..

நமக்கு நல்லது நடந்தால் நல்ல ராசி. அதுவே கெட்டது நடந்தால் கெட்ட ராசி என்று ராசிகளை பிரித்துச் சொல்லி விடுகிறோம். ஆனால் உண்மையில் நல்ல ராசி என்றோ, கெட்ட ராசி என்றோ எதுவுமில்லை. எல்லா ராசியும் நல்ல ராசி என்று தான் கூற வேண்டும்.

சிலரிடம் ‘உங்கள் ராசி என்ன?’ என்று கேட்டால், உடனே ‘நான் சிம்ம ராசி’ என்று சொல்வார்கள். சிம்ம ராசிதான் இருப்பதில் நல்ல ராசி என்றும், அப்படியே சிங்கம் போல் நானும் இருப்பேன் என்றும் கற்பனையை வளர்த்துக் கொண்டு திரிவார்கள்.

ஆனால் உண்மையில் சிம்ம ராசிக்கும், அவர்களுக்கும் எந்த விதமான சம்பந்தமும் இருக்காது. உண்மையிலேயே அவருக்கு சிம்ம ராசியாக இருந்தாலும், அதில் கர்வப்பட்டுக் கொள்ள எதுவுமில்லை.

ஒருவருக்கு நல்லது, கெட்டது நடப்பது ராசிகளால் அல்ல. கிரகங்களும் திசா புத்திகளும் நல்லது கெட்டதை தீர்மானிக்கும் காரணிகள் என்பதை உணர வேண்டும்.

இந்த உலகில் தோன்றிய ஒவ்வொரு உயிருக்கும் ஒரு ராசி இருக்கும். அவை நட்சத்திர அடிப்படையில் தான் அமையும். நமக்கு வரக்கூடிய நோய்கள் அனைத்தும் ராசிகளால் அல்ல. ஆனால் இந்தந்த ராசிகளுக்கு என்று பொதுவான சிலவகை நோய்கள் உண்டு. அவை என்ன என்பதைப் பார்ப்போம்.

மேஷம்

ராசி மண்டலத்தில் முதலாவது ராசியாக இருப்பது மேஷம் ஆகும். இவை பார்ப்பதற்கு ஆடு போல் தோற்றம் தரக்கூடியது. சூரியன் இந்த ராசிக்கு செல்லும் போது சித்திரை மாதம் பிறக்கிறது.

நமது உடலில் தலைப்பகுதியை அங்கம் வகிக்கும் ராசிக்கு பொதுவாக வரக்கூடிய நோய் காய்ச்சல். இந்த ராசியின் அதிபதி செவ்வாய். இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு தொற்று நோய், சுவாசக் கோளாறு, சிறுநீர் கல் அடைப்பு, ரத்த சோகை, ஏதாவது ஒரு கட்டத்தில் ஒரு சிறிய ஆபரேஷன் செய்ய வேண்டிய நிலை உருவாகும். இவைகள் அனைத்தும் ஏதாவது ஒரு சமயத்தில் வந்து போகும் நோய்கள்.

ரிஷபம்

ராசி மண்டலத்தில் இரண்டாவது ராசியாக இருக்கும் ரிஷபத்தின் அதிபதி சுக்ரன். எருது காளை போல் தோற்றம் தரக்கூடியது. இந்த ராசியில் சூரியன் பிரவேசிக்கும் மாதமே வைகாசியாகும்.

நமது உடலில் முகத்தை அங்கமாக வகிக்கும் இந்த ராசிக்கு வரக் கூடிய பொதுவான நோய் ஜலதோஷம். மேலும் இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு, பற்கள் சிதைவு, தோல் நோய், சீதபேதி, காசநோய், விஷக்காய்ச்சல் போன்றவை அவ்வப்போது வந்து போகலாம்.

மிதுனம்

மூன்றாவது ராசியான மிதுனத்தின் அதிபதி புதன் கிரகம். இது ஆண், பெண் சேர்ந்து இருப்பது போல் தோற்றம் தரும். சூரியன் இந்த ராசிக்கும் நுழையும் போது ஆனி மாதம் பிறக்கிறது.

இந்த ராசிக்கென்று வரக்கூடிய நோய்களில் ஒன்று வாதம் ஆகும். நமது உடலில் மார்பு பகுதியில் இந்த ராசி அங்கம் வகிக்கிறது. இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு வாயு தொல்லை, தலைவலி, வயிற்றுக்கோளாறு, தீராத மலச்சிக்கல், புதிய தொற்று நோய் வரக்கூடும்.

கடகம்

சந்திரனை அதிபதியாகக் கொண்டு செயல்படுவது கடக ராசியாகும். இது நான்காவது ராசி. இதன் தோற்றம் நண்டு போல் இருக்கும். சூரியன் இந்த ராசிக்கு செல்லும் போது, ஆடி மாதம் பிறக்கிறது.

நமது உடலில் இதயத்தை அங்கம் வசிக்கும் கடக ராசி, பொதுவாக தண்ணீரால் வரும் நோய்களை உருவாக்கும். இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு மலச்சிக்கல், அஜீரண கோளாறு, காது கோளாறு, தோல் நோய், கெட்ட பழக்கவழக்கத்தால் வரக்கூடிய நோய் உண்டாகும்.

சிம்மம்

ராசி மண்டலத்தில் ஐந்தாவதாக உள்ள இந்த ராசி, சிங்கம் போன்ற தோற்றம் அளிக்கக்கூடியது. சூரியனை அதிபதியாகக் கொண்ட இந்த ராசி, நமது உடலில் வயிற்றுப் பகுதியில் அங்கம் வகிக்கிறது.

இந்த ராசிக்கும் வரக்கூடிய பொதுவான ஒன்று, உடலில் காயம் ஏற்படுவது. சூரியன் சிம்ம ராசிக்குள் நுழையும்போது, ஆவணி பிறக்கிறது. இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு நரம்பு தளர்வு, நெஞ்சு வலி, சிறுநீர் பிரச்சினை, கண் காது கோளாறு, பாத வெடிப்பு, கெட்ட பழக்கவழக்கங் களால் வரக்கூடிய நோய்கள் வந்து சேரும்.

கன்னி

ராசி மண்டலத்தில் ஆறாவது ராசியாக உள்ளது கன்னி. இந்த ராசியின் தோற்றம், ஒரு பெண் ஒரு கையில் கதிர் குலையும், மறு கையில் அக்னி தீபம் ஏந்தியவாறு இருக்கும்.

சூரியன் இந்த ராசிக்குள் நுழையும் மாதம் புரட்டாசியாகும். நமது உடலில் இடுப்பு பகுதியில் அங்கம் வகிக்கும் கன்னி ராசிக்கென்று, பொதுவாக வரக்கூடிய நோய் முடக்கு வாதம்.

கன்னி ராசியின் அதிபதி புதன் ஆவார். இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு சளித்தொல்லை, ரத்தம் சம்பந்தப்பட்ட நோய், பிறப்பு உறுப்பை சுற்றி தோல் நோய், பற்கள் பிரச்சினை, பருவ காலத்தில் வரக்கூடிய நோய்கள் போன்றவை வந்து போகும்.

துலாம்

சுக்ரனை அதிபதியாக கொண்ட துலாம், ராசி மண்டலத்தில் ஏழாவது ராசியாக விளங்குகிறது. இதன் தோற்றம்… ஒரு ஆண் தராசு கையில் பிடித்தபடி இருப்பது போல் இருக்கக் கூடியவை.

இந்த ராசி நமது உடலில், அடி வயிற்றுப் பகுதியில் அங்கம் வகிக்கிறது. இந்த ராசிக்கென்று வரக்கூடிய பொதுவான நோயாக பால்வினை நோய் உள்ளது.

மேலும் இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு கண் பார்வைக் கோளாறு, மூலநோய், விஷக் காய்ச்சல், வாயுத்தொல்லை, கெட்ட பழக்கவழக்கத்தால் வரக்கூடிய தொற்று நோய்கள் போன்றவை அவ்வப்போது வந்து போகும்.

விருச்சிகம்

ராசி மண்டலத்தில் எட்டாவது ராசியாக விருச்சி கத்தின் அதிபதி செவ்வாய் கிரகம் ஆகும். இதன் தோற்றம் கருந்தேள் போல் இருக்கக் கூடியது. சூரியன் இந்த ராசிக்குள் நுழையும் மாதம் கார்த்திகை பிறக்கிறது.

இந்த ராசி நமது உடலில் பிறப்பு உறுப்புக்களில் அங்கம் வகிக்கிறது. இந்த ராசிக்கென்று வரக்கூடிய பொதுவான நோய் வாயுத் தொல்லை. இது தவிர இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு மஞ்சள் காமாலை, நரம்பு தளர்வு, மனக் கோளாறு, தோல் நோய், சளித்தொல்லை உள்ளிட்ட நோய்கள் ஏற்படும்.

தனுசு

குரு பகவானை அதிபதியாகக் கொண்ட ராசி தனுசு. இது ராசி மண்டலத்தில் ஒன்பதாவது ராசியாக இருக்கிறது. இந்த ராசியின் தோற்றம்.. இடுப்புக்கு மேல் வில்லை பிடித்த ஆண் உருவம், இடுப்புக்கு கீழ் குதிரை வடிவம். சூரியன் மார்கழி மாதம் முழுவதும் இந்த ராசியில் இருப்பார்.

இந்த ராசி நமது உடலில் இடுப்புக்குக் கீழ் பகுதியில் ஆதிக்கம் செய்கிறது. இந்த ராசிக்கென்று வரக்கூடிய நோய் எலும்பு சம்பந்தப்பட்ட நோய்களாகும். மேலும் இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு ஒவ்வாமை என்னும் அலர்ஜி, மூச்சுக் கோளாறு, செரிமான கோளாறு, புதிய தொற்று நோய்கள், சளித் தொல்லை இருக்கக்கூடும்.

மகரம்

ராசி மண்டலத்தில் பத்தாவது ராசியாக இருக்கும் மகர ராசியின் அதிபதி, சனி கிரகம் ஆகும். இதன் வடிவம் கடல் குதிரை போல் அமைந்திருக்கும். தை மாதம் முழுவதும் இந்த ராசியில் சூரியன் பயணிப்பார்.

இந்த ராசி மனித உடலில் முழங்கால்களை ஆதிக்கம் செய்கிறது. இந்த ராசிக்கென்றே வரக்கூடிய நோய் மஜ்ஜை நோயாகும். இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு மன அழுத்தம், பித்த நீர் பையில் கோளாறு, சுவாசக் கோளாறு, கண் பார்வைக் கோளாறு, தோல் அரிப்புகள் வந்து போகும்.

கும்பம்

ராசி மண்டலத்தில் பதினோறாவது ராசியாக கும்ப ராசி. இந்த ராசியின் அதிபதியும் சனியே ஆவார். இந்த ராசியின் தோற்றம், ஆண் ஒருவர், குடத்தை வைத்திருப்பது போல் இருக்கும். சூரியன் இந்த ராசியில் மாசி மாதம் முழுவதும் தங்கிஇருப்பார்.

நமது உடலில் கணுக்கால்களை ஆதிக்கம் செய்யும் ராசி இது. இந்த ராசிக்கென்று வரக்கூடிய நோய் நரம்பு தளர்வு ஆகும். இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு மூலநோய், தொற்று நோய், உடல் எடை கூடுதல், பற்சிதைவு, சுவாசக் கோளாறு போன்ற நோய்கள் வரக்கூடும்.

மீனம்

ராசி மண்டலத்தில் கடைசி ராசியாகவும், பன்னிரண்டாவது ராசியாகவும் மீனம் உள்ளது. இதன் அதிபதி குரு பகவான். இரண்டு மீன்கள்… ஒரு மீன் வாலை மற்றொரு மீன் கவ்விக் கொண்டு இருப்பது போல தோற்றம் தரக்கூடியது.

பங்குனி மாதம் முழுவதும் இந்த ராசியில் சூரியன் பயணிப்பார். நமது உடலில் பாதத்தை இந்த ராசி அங்கமாக கொண்டு உள்ளது. இந்த ராசிக்கென்று வரக் கூடிய நோய் ரத்தம் சம்பந்தப்பட்ட நோய்கள்.

இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு சளித்தொல்லை, சுவாசக் கோளாறு, கண் மற்றும் பற்கள் கோளாறு, பருவநிலை நோய், உடலில் காயங்கள், தழும்புகள் உண்டாகும். 12 ராசிகளுக்கும் வரக்கூடிய பொதுவான நோய்களான இவை அவரவர் ஜாதகத்தில் உள்ள விதிப்படியே நடக்கும்.

பொதுவாக ராசிகள் வரக்கூடிய நோய்கள் அனைத்தும் கிரகங்கள். திசா புத்தி கணக்குப்படி தான் வருகிறது. இந்த நோய் வர வேண்டும் என்று விதி இருந்தால் அது விடாது வந்தே தீரும். போவது போயே தீரும். இதனை மனதில் கொண்டு நாட்களை மகிழ்ச்சியோடு போக்க வேண்டும்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]