முகப்பு News Local News 1000 நாட்களை சிறையில் கழித்துள்ள பிள்ளையான்

1000 நாட்களை சிறையில் கழித்துள்ள பிள்ளையான்

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை தொடர்புடைய குற்றச்சாட்டின் பேரில் கைதாகி தற்போது 1000 நாட்களைச் சிறையில் கழித்துள்ளது.

11.07.2018 புதன்கிழமையுடன் ஆயிரம் நாட்களைத் தொடர்ச்சியான விளக்கமறியல் நீடிப்பின்போது அவர் கழித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கடந்த 2005ஆம் ஆண்டு மட்டக்களப்பு புனித மரியாள் இணைப் பேராலயத்தில்; நடைபெற்ற நத்தார் நள்ளிரவு ஆராதனையில் கலந்து கொண்டிருந்தபோது அடையாளந்தெரியாத துப்பாக்கிதாரிகளினால் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார்.

இச்சம்பவத்தில் அவரது மனைவி உட்பட சிலர் காயமடைந்தனர்.

கிழக்கில் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பில் பிளவு ஏற்பட்டிருந்த கால கட்டத்தில் இந்த படுகொலை சம்பவம் நடந்திருந்தது.

அவரது கொலை தொடர்பான விசாரணைக்காக கொழும்பிலுள்ள குற்றப்புலனாய்வு பிரிவுக்கு சென்றிருந்தபோதே கடந்த 2015ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 11ஆம் திகதி கைது செய்யப்பட்ட சிவநேசதுரை சந்திரகாந்தன் மீதான விளக்கமறியில் நீதிமன்றத்தினால் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டு வருகின்ற நிலையில் இந்த 1000 நாட்களை அவர் சிறையில் கழித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சித்; தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முன்னாள் தேசிய அமைப்பாளரும் முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான பிரதீப் மாஸ்டர் என அழைக்கப்படும் எட்வின் சில்வா கிருஸ்ணானந்தராஜா, கஜன் மாமா எனப்படும் கனகநாயகம் மற்றும் இராணுவப் புலனாய்வு உத்தியோகஸ்தர் எம்.கலீல் முன்னாள் இரானுவ சிப்பாயான மதுசிங்க(வினோத்) ஆகியோர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் ஆட்சிக் காலத்தில் செல்வாக்கு மிக்கவராக கருதப்பட்ட சிவநேசத்துரை சந்திரகாந்தன் கிழக்கு மாகாணசபைக்கான முதலாவது தேர்தலில் போட்டியிட்டு 2008- இல் முதலமைச்சராக தெரிவாகி 2012 வரை அந்தப் பதவியில் இருந்தார்.

2012 கிழக்கு மாகாண சபை தேர்தலில் இவர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் கிழக்கு மாகாணசபைக்கு தெரிவாகியிருந்த போதிலும் மாகாண அமைச்சரவையில் இடம்பெறவில்லை. இந்தப் பின்னணியில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசகர்களில் ஒருவராக பிள்ளையான் நியமனம் பெற்றிருந்தார்.

கிழக்கில் விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்த கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தலைமையிலான அணியினரால் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பு ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

பின்னர் அந்த அமைப்புக்குள் ஏற்பட்ட முரண்பாடுகளைத் தொடர்ந்து கருணா அம்மான் ஒரு சாராருடன் விலகி அப்போது மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்ததோடு அக்கட்சியின் பிரதித் தலைவராகவும் நியமிக்கப்பட்டிருந்தார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com