ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியை வழிமறித்து தோட்ட தொழிலாளர்கள் சம்பள உயர்வை பெற்றுத்தருமாறு கோரி ஆர்ப்பாட்டம்

தலவாக்கலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஹேலிஸ் பெருந்தோட்ட கம்பனிக்கு சொந்தமான ஹொலிரூட் தோட்டத்தை சேர்ந்த 4 பிரிவுகளிலிருந்து சுமார் 500 பேர் கலந்து கொண்டிருந்தனர்.

இவர்கள் இன்று முற்பகல் ஹொலிரூட் தோட்ட தொழிற்சாலை முன்பாக பேரணியாக ஆரம்பித்து தலவாக்கலை நகரம் வரை ஊர்வலமாக வந்து தலவாக்கலை சுற்று வட்டத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ரூபா 1000 ஐ அடிப்படை வேதனமாக பெற்றுத் தருமாறு கோரி ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷங்கள் எழுப்பியதோடு, சுலோகங்களையும் ஏந்தியிருந்தனர்.

இதேவேளை ஹட்டன் – நுவரெலியா பிரதான விதியை வழிமறித்து லோகி தோட்ட தேயிலை தொழிற்சாலை முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் லோகி – மிடில்டன் – கூம்வூட் – நானு ஓயா ஆகிய தோட்டங்களை சேர்ந்த சுமார் 500ற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபகிஷ்கரிப்பில் ஈடுப்பட்டதோடு, ஆர்ப்பாட்டத்திலும் ஈடுப்பட்டனர்.

இவ் ஆர்ப்பாட்டம் காரணமாக குறித்த வீதியூடான போக்குவரத்துக்கு சுமார் 45 நிமிடங்கள் பாதிக்கப்பட்டிருந்தன. இவ் இரு ஆர்ப்பாட்டங்கள் காரணமாக மொத்தமாக 2 மணித்தியாலங்கள் ஹட்டன் – நுவரெலியா வீதியின் ஊடான போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடதக்கது.

அத்தோடு இன்று முற்பகல் 11 மணியளவில் லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெயார்வெல், பெல்கிரேவியா, வலகா, பேரம், இராணிவத்தை, பம்பரகலை, நோனாதோட்டம், தலாங்கந்தை, கல்கந்தை ஆகிய தோட்டங்களைச் சேர்ந்த சுமார் 2000 ற்க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஒன்று கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]