ஹட்டனில் ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு

புதுளை தமிழ் மகளிர் வித்தியாலய அதிபர் பவானி ரகுநாதனை, ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க தன்னுடைய இல்லத்திற்கு அழைத்து மண்டியிடவைத்த விடயத்துக்கு எதிர்ப்பு வெளியிட்டு மாபெரும் கண்டன போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை ஆசிரியர் சங்கம், மலையக ஆசிரியர் முன்னணி, ஆசிரியர் விடுதலை முன்னணி, இலங்கை கல்வி சமூக சம்மேளனம், இலங்கை ஜக்கிய தமிழர் ஆசிரியர் சங்கம் என்பன இணைந்து இந்த அழைப்பை விடுத்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளன.

ஹட்டன் பஸ் தரிப்பு நிலையத்துக்கு 30ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பி.ப 2.00 மணிக்கு இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெறவுள்ளது.

ஆசிரியர் சமூகத்தையும் அதிபர் சமூகத்தையும் கல்விச் சமூகத்தையும் பெண்கள் சமூகத்தையும் கீழ்த்தரமாக அவமானப்படுத்திய முதலமைச்சர், மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், மாகாண கல்விப் பணிப்பாளர், வலயக் கல்விப் பணிப்பாளர் ஆகியோரை உடனடியாக பதவி நீக்கு, முதலமைச்சர், மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், மாகாணக் கல்விப் பணிப்பாளர், வலயக் கல்விப் பணிப்பாளர் ஆகியோரை உடனடியாக. பதவி நீக்க வேண்டும், அவர்களை உடனடியாக ஒழுக்காற்று நடவடிக்கைக்கு உட்படுத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டம் இடம்பெறவுள்ளது.