ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்புமனு பதுளையில் நிராகரிப்பு

பதுளை மாவட்ட உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்காக தாக்கல் செய்யப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் சுயேற்சை குழுவொன்றின் வேட்டு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக, பதுளை மாவட்ட தெரிவு அத்தாட்சி அலுவலர் நிமால் அபயசிரி தெரிவித்தார்.

முதலாம் கட்ட வேட்பு மனுத் தாக்கல் இன்று நண்பகல் 12 மணியுடன் நிறைவு பெற்ற நிலையில், மாவட்ட செயலகத்தில் இன்று பிற்பகல் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார்.

வேட்பு மனுக்கள், பரிசீலனையின் போது, பதுளை, மகியங்கனை ஆகிய பிரதேச சபைகளுக்கான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பு மனுக்கள் மற்றும் மகியங்கனை பிரதேச சபைக்கான சுயேச்சை வேட்பு மனுவும் முற்று முழுதாக நிராகரிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்து கூறுகையில், “பதுளை பிரதேச சபைக்கான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பட்டியலில் பெண்கள் பிரதிநிதித்துவம் இல்லாமை மற்றும் மகியங்கனை பிரதேச சபைக்கான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பட்டியலில் அபேட்சகரின் கையொப்பம் இடப்பட்டிருந்தாலும், அவரது பெயர் பட்டியலில் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை.

சுயேச்சைக் குழு வேட்பு மனு படிவத்தில் ஏற்பட்டிருந்த பல்வேறு குளறுபடிகளினாலுமே வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது. அத்துடன் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பு மனுவை சமர்ப்பிக்க ஹப்புத்தளை பிரதேச சபை கட்டுப்பணம் செலுத்திய போதிலும், அப்புத்தளை பிரதேச சபைக்கு வேட்பு மனு,சமர்ப்பிக்கவில்லை” என்றார்.