வைத்தியர்கள் பொதுமக்களின் பொருமையை சோதிக்கின்றனர் : ராஜாராம் குற்றச்சாட்டு

வைத்தியர்கள் பொது மக்களின் பொறுமை சோதிக்க வேண்டாம். நீங்கள் போராட்டம் செய்வது போல பொதுமக்களும் வீதியில் இறங்கி உங்களுக்கு எதிராகப் போராட்டம் நடத்தினால் நிலைமை என்னவாகும் என்று மத்திய மாகாண சபை உறுப்பினரும் மலையக மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளருமான ஆர்.ராஜாராம் கேள்வியெழுப்பியுள்ளார்.

நுவரெலியா மாவட்ட செயலகத்தில் கல்வி இராஜாங்க அமைச்சின் காரியாலயத்தில் இன்று ஊடகவியலாளர்கள் வைத்தியர்களின் வேலை நிறுத்தம் தொடர்பாக கேட்கப்பட்ட கேள்வி ஒன்றிற்கு பதில் அளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறியதாவது,

வைத்தியர்கள் கடந்த பல நாட்களாக தொடர்ந்து போராட்டத்திலும் வேலை நிறுத்தத்திலும் ஈடுபட்டு வருகின்றார்கள். இதன் காரணமாக நோயாளிகள் பெறும் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளனர்.

குறிப்பாக மலையகத்தை பொருத்தமட்டில் எங்களுடைய மக்கள் வைத்தியசாலைகளுக்கு வருவதென்றால் ஒரு நாள் வேலையையும் தியாகம் செய்துவிட்டு தங்களுடைய வருமானத்தையும் இழந்து நோய்க்கான மருந்துகளைப் பெற்றுக்கொள்ள வேண்டிய ஒரு நிலை இருக்கின்றது. ஆனால், வைத்தியசாலைகளுக்கு வருகை தந்தவுடன் அங்கே வேலை நிறுத்தம் அல்லது போராட்டம் எனக் கூறப்படுகின்றது.
இதன் காரணமாக எமது மக்கள் தமது நோய்க்கான மருந்துகளைப் பெற்றுக்கொள்ள முடியாமல் ஏமாற்றத்துடன் வீடு திரும்ப வேண்டிய ஒரு நிலைமை ஏற்படுகின்றது.அவர்களுக்கு தனியார் வைத்தியசாலைகளுக்கு செல்ல முடியாத ஒரு நிலைமையும் இருக்கின்றது.

எனவே, இவ்வாறான ஒரு நிலையில் வைத்தியர்கள் தாங்கள் மிக விரைவில் மீண்டும் ஒரு போராட்டத்திற்கு தயாராகிவருவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவிக்கின்றது. இது பொது மக்களின் பொறுமையை சோதிக்கின்ற ஒரு செயலாகவே நான் கருதுகின்றறேன்.

அண்மையில் வைத்தியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த பொழுது ஒரு சில வைத்தியர்கள் தமது தனியார் வைத்திய நிலையங்களில் மிகவும் சிறப்பாக அதனை கொண்டு நடத்துவதை நாங்கள் ஊடகங்களின் மூலமாக அறிந்து கொண்டோம்.அவர்களுக்கு எதிராக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் என்ன விதமான நடவடிக்கைகளை மேற்கொண்டார்கள் என்பது தெரியவில்லை.

எனவே, தொடர்ச்சியாக வைத்தியர்கள் இவ்வாறு செய்தால் அது பொது மக்களின் பொறுமையை இழக்கச் செய்கின்ற ஒரு செயலாகவே இருக்கும். வைத்தியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை விட்டுவிட்டு வேறு வழிகளை கையாள வேண்டும்.

எமது நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் டெங்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.இதனைக் கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு தரப்பினரும் முயற்சிகளை எடுத்து வருகின்ற ஒரு நிலையில் அதற்காக முக்கிய பங்களிப்பை செய்ய வேண்டியவர்கள் அதனைக் கண்டுகொள்ளாமல் தாங்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள். இது மனிதாபிமானமற்ற ஒரு செயலாகவே நான் கருதுகின்றேன் என்றார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]