வைத்தியர்களின் அசமந்த போக்கில் பரிதாபமாக உயிரிழந்த இளைஞன் – அம்பாறையில் சம்பவம்!!

அம்பாறை திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்பட்டை பாலத்தடிப் பகுதியில் நேற்று (14) இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த இளைஞன் உரிய சிகிச்சை இன்றி உயிரிழந்துள்ளார்.

விபத்தில் சிக்கிய இளைஞனை மேலதிக சிகிச்சைக்காக உரிய நேரத்தில் வேறு வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்வதற்கான நோயாளர் காவு வண்டிக்கான சாரதி இல்லாது காலதாமதமாகியதன் காரணமாகவே இளைஞன் உயிரிழந்துள்ளதாக கூறி, கோபம் கொண்ட அப்பகுதி இளைஞர்கள் திருக்கோவில் ஆதார வைத்தியசாலையை நேற்று (14) மாலை(14) முற்றுகையிட்டனர்.

அத்துடன் திருக்கோவில் ஆதார வைத்தியசாலையானது வெறுமனே பெயர் பலகையோடு மாத்திரம் இயங்குவதாகவும், எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லை என்றும், வைத்தியசாலையில் பணிபுரிகின்ற உத்தியோகத்தர்கள் பொறுப்புடன் நடந்து கொள்வது இல்லை என்றும் அவர்கள் மேலும் கூறியுள்ளனர்.

இதனால் அப் பிரதேசவாசிகள் பாதிக்கப்படுவதோடு பல உயிரிழப்பு சம்பவங்கள் அரங்கேறுகிறது என்றும் குற்றம் சுமத்தியுள்ளனர்.

மக்களுக்கு பயனற்ற நிலையில் இந்த ஆதார வைத்தியசாலை இயங்க தேவையில்லை என்றும் என்றும் முற்றுகையாளர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்த தாமதிக்காமல் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என திருக்கோவில் பிரதேச சபையில் தவிசாளர் இ.வி.கமலராஜனிடம் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து திருக்கோவில் பொலிஸ் நிலையப் பதில் கடமை பொறுப்பதிகாரி எச்.எம்.பி. ஹேரத் இளைஞர்களை அமைதிப்படுத்தினார்.

அத்துடன் திங்கட்கிழமை 16ஆம் திகதி காலை 09 மணிக்கு வைத்தியசாலை நிர்வாகம் மற்றும் சம்மந்தப்பட்ட உயர் அதிகாரிகளை அழைத்து கலந்துரையாடல் ஒன்றினை முன்னெடுக்கப்படவுள்ளது.

அப்போது இந்த பிரச்சினை தொடர்பாக கருத்துக்களை அங்கு தெரிவிப்பதற்கு சந்தர்ப்பம் பெற்றுத் தருவதாகவும் உறுதி மொழி வழங்கினார்.

அவரது உறுதி மொழியினைத் தொடர்ந்து அப்பகுதியில் இருந்து சுமார் இரவு 08 மணியளவில் இளைஞர்கள் கலைந்து சென்றனர்.

இதேவேளை குறித்த விபத்தில் உயிரிழந்தவர் திருக்கோவில் 4 மண்டானை கிராமத்தினை சேர்ந்த 32 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான அருள்நாயகம் அருள்ராஜ் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இதேவேளை மேற்குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]