வேலையற்ற பட்டதாரிகள் இன்னொரு போராட்டத்தை நடாத்துவதற்கு மத்திய மாகாண அரசு வழியமைக்கக் கூடாது – இரா.துரைரெட்ணம்

வேலையற்ற பட்டதாரிகள் இன்னொரு போராட்டத்தை நடாத்துவதற்கு மத்திய மாகாண அரசு வழியமைக்கக் கூடாது – இரா.துரைரெட்ணம்.

வேலையற்ற பட்டதாரிகள்

வேலையற்ற பட்டதாரிகள் இன்னொரு போராட்டத்தை நடாத்துவதற்கு மத்திய மாகாண அரசு வழியமைக்கக் கூடாது. இவை மட்டுமின்றி அரசியல் தலைமைகளும் மௌனிகளாக இருந்து விடக்கூடாது என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு நேற்றைய தினம் 01ஆம் திகதி அனுப்பிவைத்துள்ள ‘வேலையற்ற பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்க நடவடிக்கை எடுக்கக் கோரல்’ என்ற தலைப்பிட்ட கடிதத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன் பிரதிகள் பிரதமர் மற்றும் கிழக்கு மாகாண ஆளுனருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

அவரது கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கிழக்கு மாகாணசபையின் பொதுச்சேவை ஆணைக்குழுவால் வேலையற்ற பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்குவது தொடர்பாக விண்ணப்பங்கள் கோரப்பட்டு போட்டிப் பரீட்சை நடாத்தி, 2868க்கு மேற்பட்டவர்கள் 40 புள்ளிகளுக்கு மேல் எடுத்த நிலையில் சுமார் 1441 பேருக்கு ஆசிரிய நியமனம் வழங்கப்படப்போவதாக அறியக் கூடியதாக உள்ளது.

இந்நடவடிக்கை எடுத்தமைக்காக ஆளுனர், பொதுச்சேவை ஆணைக்குழு செயலாளர், கல்வி அமைச்சு ஏனைய உத்தியோகத்தர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

தற்சமயம் வழங்கப்படப்போகும் 1500 நியமனங்களைத் தவிர மிகுதியாக 40 புள்ளிகள் எடுத்தவர்கள் 1400ற்கு மேற்பட்டவர்கள் உள்ளனர். ஏனைய 40 புள்ளிகளுக்கு குறைவாக எடுத்தவர்கள் 3000 உள்ளதும் குறிப்பிடத்தக்கதாகும். இந்த நிலையில்

1. 40 புள்ளிகளுக்கு மேல் எடுக்கப்பட்டவர்கள் 1400 பேருக்கு மேற்பட்டவர்கள் உள்ளதால் இவர்களும் ஆசிரிய நியமனம் கோரி நிற்கின்றனர்.

2. 40புள்ளிகளுக்கு மேல் எடுக்கப்பட்டவர்களில் 40-45 வயதை உடையவர்களும் வயது அதிகரித்துச் செல்பவர்களும் உள்ளதால் இவர்களும் நியமனம் வழங்குமாறு கோரியுள்ளனர்.

3. 40 புள்ளிகளுக்கு கீழ் எடுத்தவர்கள் 40-45 வயதை உடையவர்களும் உள்ளதால் இவர்களும் நியமனம் வழங்குமாறு கோரியுள்ளனர்.

4. மிகுதியாக உள்ள 3000பேர் பரீட்சையில் குறிப்பிட்ட புள்ளிகளுக்கு மேல் எடுக்காத வேலையற்ற பட்டதாரிகள் உள்ளதால் விசேட திட்டத்தின் கீழ் மத்தியமாகாண அரசு பயிற்சி அடிப்டையிலோ அல்லது ஏதாவதொரு முறையைக் கையாண்டு ஆசிரிய தொழிலோ அல்லது திணைக்களங்களிலோ நியமனங்களை கோரி நிற்கின்றனர்.

வேலையற்ற பட்டதாரிகளை பொறுத்தவரையில் தொடர்ச்சியாக கிழக்கு மாகாணத்தில் சுமார் 3000ற்கு மேற்பட்டவர்கள் 5 மாதங்கள் கவனயீர்ப்பு போராட்டம் நடாத்தி இவர்களது நியமனத்திற்கு வலுச்சேர்த்தவர்கள் என்பதை யாரும் மறுதழிக்க முடியாது.

இவர்களைப் பொறுத்தவரையில் மீண்டும் வேலையற்ற பட்டதாரிகளை இன்னொரு போராட்டத்தை நடாத்துவத்கு மத்திய மாகாண அரசு வழியமைக்கக் கூடாது. இவைமட்டுமின்றி அரசியல் தலைமைகளும் மௌனிகளாக இருந்து விடக்கூடாது.

பட்டதாரிகளுக்கு வயதுகள் அதிகரித்துச் செல்வதால் தற்கொலை செய்யுமளவிற்குக் கூட ஒரு சிலருக்கு மனநிலை மாறியுள்ளது.

எனவே மத்திய மாகாண அமைச்சு இவர்களுக்கான நியமனத்தை வழங்க துரித நடவடிக்கை எடுத்து நியமனம் வழங்க ஆவன செய்யவேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]