வேலைநிறுத்தப் போராட்டத்தை விடுத்து அரசுடன் அர்த்தமுள்ள பேச்சுகளை மேற்கொள்ள வைத்தியர் சங்கம் முன்வர வேண்டும்

வேலைநிறுத்தப் போராட்டத்தை விடுத்து அரசுடன் அர்த்தமுள்ள பேச்சுகளை மேற்கொள்ள அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் முன்வர வேண்டும் என்று பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எரான் விக்ரமரத்ன தெரிவித்தார்.

அரச தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் வலியுறுத்தியதாவது,

சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி பிரச்சினை தொடர்பில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினருக்கு கருத்து வெளியிட பூரண சுதந்திரம் உள்ளது. இதுகுறித்து அவர்கள் அரசுடன் பேச்சு நடத்த முன்வருவார்களாயின் நாம் அதனை ஒருபோதும் தட்டிக்கழிக்க மாட்டோம்.

பேச்சுக்கள் மூலம் தான் இதற்கான தீர்வுகளையும் முன்வைக்க முடியும். அதனை விடுத்து வேலைநிறுத்தப் போராட்டங்களை மேற்கொள்வது ஆரோக்கியமான விடயமல்ல. அரச பாடசாலையில் கல்விக்கற்று, அரச பல்கலைக்கழகங்களில் உயர்க்கல்வி முடித்து பட்டம் பெற்று, அரச வைத்தியசாலைகளிலேயே வேலை செய்து சம்பளத்தைப் பெற்றுக்கொண்டு அரசுக்கு எதிராகவே இவ்வாறான ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்ளக் கூடாது.

அரச வைத்திய சேவையை எதிர்ப்பார்த்து பல இன்னல்களுக்கு மத்தியல் தான் பொதுமக்கள் அரச வைத்தியசாலையை நாடுகிறார்கள். அப்படியானவர்களுக்கு அச்சேவையை கொடுக்காமல் இருப்பது முறையான ஒன்றல்ல. எந்த நாட்டிலும் இல்லாதவகையில் இலங்கையில் மட்டும்தான் அரச வைத்தியர்கள் தனியார் வைத்தியசாலைகளிலும் வேலை செய்ய முடியும் என்ற சலுகை வழங்கப்பட்டுள்ளது. எனவே, இவை குறித்தெல்லாம் இத்தரப்பினர் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்றார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]