முகப்பு News Local News வேன் சாரதியின் கவனயீனத்தால் பரிதாபமாக உயிரிழந்த 14வயது பாடசாலை மாணவன்

வேன் சாரதியின் கவனயீனத்தால் பரிதாபமாக உயிரிழந்த 14வயது பாடசாலை மாணவன்

வேன் கதவு அதன்சாரதியால் அவதானமின்றித் திறக்கப்பட்டதால் சைக்கிளில் பாடசாலைக்குச் சென்று கொண்டிருந்தபோது வீதியில் தள்ளப்பட்டு படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்றுவந்த சிறுவன் திங்கட்கிழமை 30.07.2018 அதிகாலை மரணமடைந்துள்ளார்.

காத்தான்குடி மத்திய கல்லூரியில் தரம் 9இல் கல்வி பயிலும் காத்தான்குடி-01, மீரா ஜும்ஆ பள்ளி ஒழுங்கையைச் சேர்ந்த ஏ.பி.எம். இன்ஷாப் (வயது 14) என்ற மாணவனே மரணமடைந்தவராகும்.

கடந்த செவ்வாய்க்கிழமை 24.07.2018 காத்தான்குடி நகரில் இடம்பெற்ற இத்துயர சம்பவம் பற்றி மேலும் தெரிய வருவதாவது, குறித்த சிறுவன் தனது சைக்கிளில் காத்தான்குடி பிரதான வீதியால் சென்று கொண்டிருக்கும்போது வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேன் ஒன்றின் சாரதி அதன் கதவை அவதானமின்றித் திடீரெனத் திறந்துள்ளார்.

அதனால் சைக்கிளில் சென்ற சிறுவன் எதிர்பாராத விதமாக பிரதான வீதியில் தள்ளப்பட்டு விழுந்து முச்சக்கரவண்டியினால் மோதப்பட்டு காயங்களுக்குள்ளானார்.

அவர், உடனடியாக காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டார்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவிலே சிகிச்சை பெற்றுவந்த நிலையில் அவர் மரணமானார்.

இச்சிறுவனின் தாய் காத்தான்குடி ஷாவியா வித்தியாலய ஆசிரியையாகவும் தந்தை காத்தான்குடி மத்திய கல்லூரி ஆய்வுகூட உதவியாளராகவும் கடமை புரிகின்றனர்.

இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com