முகப்பு News Local News வேதன அதிகரிப்பு தொடர்பில் எதிர்ப்பு – ஜே வி பி

வேதன அதிகரிப்பு தொடர்பில் எதிர்ப்பு – ஜே வி பி

நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களின் வேதன அதிகரிப்பு விடயத்தில் ஜே வி பி எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

நாடு கடனில் சிக்கியுள்ளதாக கூறப்படுகின்ற நிலையில், இவ்வாறான அதிகரிப்பு எவ்வாறு சாத்தியப்படும் என்ற ஜே வி பி யின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அதிகரிக்கப்படுகின்ற வேதனத் தொகையும், அண்மையில் 1000 சீசீக்கு குறைவான வாகனங்களுக்கு அதிகரிக்கப்பட்ட வரியும் பொது மக்களின் பணமாகும்.

மேலும் பொருளாதார நெருக்கடியை காரணம் காட்டி அரசாங்க சொத்துக்களான துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்களை வேறு முதலீட்டாளர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது.

இவ்வாறான சூழ்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனத்தை அதிகரிப்பதாக கூறப்படுவது ஆச்சரியமளிக்கிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதன அதிகரிப்புக்கு தாம் இடமளிக்கப் போவதில்லை என்று, நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து இது தொடர்பில் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பிய வேளையில் அவர் இந்த கருத்தை முன்வைத்துள்ளார்.

இந்த விடயம் குறித்து தாம் அறிந்திருக்கவில்லை என்றும், எவ்வாறாயினும் தனிப்பட்ட வகையில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதன அதிகரிப்பை தாம் எதிர்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் இந்த யோசனையை தாம் அங்கீகரிக்கப் போவதில்லை என்றும் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

இதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களுக்கு வேதனம் அதிகரிக்கப்பட வேண்டும் எனவும் அதற்கு எந்தவொரு உறுப்பினரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றும் அமைச்சர் லக்ஷ்ம்ண் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

நாட்டில் நிலவும் சட்டத்திற்கமைய நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம் நீதிபதிகளின் வேதனத்திற்கு நிகரானதாக இருக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

2006 ஆம் ஆண்டு நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்ட சட்டத்திற்கு அமைய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் மாதாந்த வேதனம் நீதிபதி ஒருவரின் வேதனத்துக்கு ஒப்பானதாக இருக்க வேண்டும்.

ஏதேனும் வழியில் நீதிபதியின் வேதனம் அதிகரிக்கப்பட்டால் அதே அளவு வேதனம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அதிகரிக்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற பிரதிப் பொதுச் செயலாளர் நீல் இத்தவல தெரிவித்துள்ளார்.

இதற்கமைய கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சகல நீதிபதிகளின் வேதனங்களையும் அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது.

இந்த வேதன அதிகரிப்புக்கு அமைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களது வேதனத்தை அதிகரிக்க கடந்த 17 ஆம் திகதி இடம்பெற்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருந்ததாக ஊடகங்கள் சில செய்தி வெளியிட்டிருந்தன.

அதற்கமைய நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சரவை அமைச்சர்கள் பிரதியமைச்சர்கள் மற்றும் ராஜாங்க அமைச்சர்களது வேதனம் அதிகரிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய 54 ஆயிரத்து 285 ரூபாவாக நிலவிய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் வேதனம் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாவாகவும் 63 ஆயிரத்து 500 ரூபாவாக நிலவிய பிரதியமைச்சர் ஒருவரின் வேதனம் ஒரு லட்சத்து 35 ஆயிரம் ரூபாவதாகவும் அதிகரிக்கப்படவுள்ளது.

65 ஆயிரம் ரூபாவதாக நிலவிய ராஜாங்க அமைச்சர் ஒருவரின் வேதனம் ஒரு லட்சத்து 40 ஆயிரம் ரூபாவதாக அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com