வெளிவிவகார அமைச்சராகிறார் சாகல பெரும்பான்மையானவர்கள் பச்சைக்கொடி

இலங்கையின் புதிய வெளிவிவகார அமைச்சராக தற்போதைய சட்டம், ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க நியமிக்கப்படலாம் எனவும், இதற்கு ஆளுங்கட்சியின் பெரும்பான்மையான உறுப்பினர்கள் பச்சைக்கொடி காட்டியுள்ளனர் எனவும் அரச வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது.

இதற்காக அவர் வகிக்கும் சட்டம், ஒழுங்கு அமைச்சுப் பதவி, அமைச்சர் திலக் மாரப்பனவிடம் ஒப்படைக்கப்படும் எனவும் அவ்வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது.

நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி அரசின் வெளிவிவகார அமைச்சுப் பதவியை வகித்த ரவி கருணாநாயக்க நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை தனது அமைச்சுப் பதவியை இராஜிநாமா செய்தார்.

2015 ஆம் ஆண்டின் முற்பகுதியில் பிணைமுறி விநியோகத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேட்டில் அப்போதைய நிதி அமைச்சராக இருந்த ரவி கருணாநாயக்கவுக்கு தொடர்பு இருக்கின்றது எனவும், இந்த மோசடியுடன் தொடர்புபட்ட நிறுவனத்திடமிருந்து சொகுசு வீடொன்றைப் பெற்றுள்ளார் எனவும் அவருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில்தான் ஜனாதிபதி ஆணைக்குழுவின் சுயாதீன விசாரணைக்கு இடமளிக்கும் வகையில் ரவி கருணாநாயக்க தனது வெளிவிவகார அமைச்சுப் பதவியைத் துறந்துள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து வெளிவிவகார அமைச்சுப் பதவிக்கு வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. அந்த அமைச்சுப் பதவி திலக் மாரப்பன அல்லது நவீன் திஸாநாயக்க ஆகிய இருவரில் ஒருவருக்கு வழங்கப்படலாம் என ஆரம்பத்தில் கூறப்பட்டது. சரத் அமுனுகமவின் பெயரும் அடிபட்டது.

இவ்வாறானதொரு பின்புலத்தில்தான் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு மிகவும் நெருக்கமானவர் – விசுவாசமிக்கவர் எனக் கருதப்படும் அமைச்சர் சாகல ரத்நாயக்கவுக்கு வெளிவிவகார அமைச்சுப் பதவி வழங்கப்படவுள்ளது எனக் கூறப்படுகின்றது.

நவீன் திஸாநாயக்க ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப்பீடத்துடன் முரண்பட்டாதாலும், திலக் மாரப்பன அவன்கார்ட் சர்ச்சையில் சிக்கியதாலும் அவர்களுக்கு அப்பதவி வழங்கப்பட சாத்தியமில்லை என ஆளுங்கட்சி உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

எனினும், இது பற்றி இன்னும் உத்தியோகபூர்வ முடிவு எடுக்கப்படவில்லை.

ஜனாதிபதி இறுதிநேரத்தில் சில அதிரடி நகர்வுகளை கையாளக்கூடும் எனவும் அரசியல் வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]