வெளிநாட்டு நீதிபதிகளுக்கு இடமேயில்லை : அடித்து கூறுகிறார் மகிந்த சமரசிங்க

இறுதிக்கட்டம் யுத்தத்தின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரணை செய்வதற்கு வெளிநாட்டு நீதிபதிகளை இலங்கை அரசு அனுமதிக்காது என்று திறன் விருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்தார்.

மகிந்த சமரசிங்க
மகிந்த சமரசிங்க

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறினார்.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்பட்ட தீர்மானத்துக்கு இணங்கியதன் மூலம் இலங்கை அரசாங்கம் நாட்டைக் காட்டிக் கொடுத்து விட்டதாக மகிந்த ராஜபக்ச சுமத்திய குற்றச்சாட்டுத் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

வெளிநாட்டு நீதிபதிகளோ, தீர்ப்பாயங்களோ போருடன் தொடர்புடைய விவகாரங்கள் குறித்து விசாரிக்க அரசாங்கம் அனுமதிக்காது என்று ஜனாதிபதியும், பிரதமரும் தெளிவாக கூறியுள்ளனர். இவர்கள் இருவரும், இரண்டு கட்சிகளினதும் தலைவர்கள். எனவே, வெளிநாட்டு நீதிபதிகளின் விசாரணைக்கு வழியே இல்லை.

வெளிநாட்டு நீதிபதிகள் விசாரணைகளில் பங்கேற்பதற்கு அரசியலமைப்பில் இடமில்லை. தருஸ்மன் குழுவின் அறிக்கையை அப்போதைய அரசாங்கம் நிராகரித்திருந்தது. முறையற்றவகையில் நியமிக்கப்பட்டிருந்த அந்தக் குழுவுடன் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தை ஒப்பிட முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]