வெளிநாடுகளுக்கு செல்லும் பெண்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி

இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு பணிப்பெண் வேலைக்கு செல்லும் பெண்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சியடைந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

வெளிநாடுகளுக்கு செல்லும்
அமைச்சர் தலதா அத்துக்கோறள

இந்த ஆண்டின் முதல் 8 மாத தகவல்களின்படி, 37, 002 பெண்கள் பணிப்பெண்களாக வெளிநாடுகளுக்கு சென்றுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தகவல் வெளியிட்டுள்ளது.

2015-ஆம் ஆண்டில் 73,226 பேர் பெண்கள் வெளிநாட்டு பணிப் பெண் வேலைக்கு சென்றிருந்தனர். இந்த எண்ணிக்கை 2016ல் 65,023 குறைவடைந்திருந்ததாக அந்த தகவல்கள் மூலம் அறிய முடிகின்றது.

2017-ஆம் ஆண்டில் ஆகஸ்ட் வரை இந்த எண்ணிக்கை 37, 002-ஆக குறைவடைந்துள்ள நிலையில், மேலும் வீழ்ச்சியடையும் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு வாரியம் எதிர்பார்க்கின்றது.

பணிப் பெண்களாக பெண்கள் வெளிநாடுகளுக்கு செல்வதை குறைத்து கூடுதல் வருமானம் தரக்கூடிய தொழில்களுக்கு அனுப்புவதே தனது நோக்கம் என்று வௌிநாட்டு வேலை வாய்ப்புகள் அமைச்சரான தலதா அத்துக்கோறள தெரிவித்தார்.

பயிற்றப்பட்ட பணியாளர்கள் வெளிநாடுகளுக்கு தொழில் வாய்ப்புக்கு அனுப்புதன் மூலம் நாட்டுக்கு கூடுதலான அந்நிய செலாவணி கிடைப்பதோடு பெண்களும் கூடுதல் வருமானம் கிடைக்கும் என்றும் அவர் தெரிவிக்கின்றார்.

2015-ஆம் ஆண்டில் 17,429 பெண்களும் 2016-ஆம் ஆண்டில் 17 ,495 பெண்களும் வீட்டுப் பணிப் பெண்கள் அல்லாத வேறு பணிகளுக்கு பயிற்றப்பட்ட பணியாளர்களாக வெளிநாடுகளுக்கு சென்றுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு வாரியத்தில் அறிக்கையிடப்பட்டுள்ளன.

2017-ஆம் ஆண்டு ஆகஸ்ட் வரை, பணிப் பெண் அல்லாத பயிற்றப்பட்ட அல்லது வேறு தொழில்களுக்காக வெளிநாடுகளுக்கு சென்ற பெண்களின் எண்ணிக்கை 11,372 ஆகும். இந்த தரவுகளின் படி அதிக அதிகரிப்பை இதில் காண முடியவில்லை.

இந்த ஆண்டின் முதல் 8 மாதங்களில் வெளிநாடுகளுக்கு பொதுவாக சென்றுள்ள இலங்கை பணியாளர்களின் எண்ணிக்கை 1, 41,725 பேர் ஆகும். இவர்களில் 48,374 பேர் பெண்கள் , 91,351 ஆண்கள். கூடுதலானோர் சென்ற நாடு கத்தார் என வெளிநாட்டு வாரியம் கூறுகின்றது

2016-இல் தொழில் வாயப்பு பெற்று வெளிநாடு சென்ற இலங்கையர் எண்ணிக்கை 2 ,42,838 ஆகும். இந்த எண்ணிக்கையில் 1,60, 320 ஆண்களும் 82,518 பெண்களும் அடங்குகின்றனர். பெரும்பாலும் இவர்கள் சென்ற நாடு செளதி அரேபியா என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தரவுகளை அடிப்படையாக கொண்டு பார்க்கும்போது வெளிநாடுகளில் சட்ட ரீதியாக சென்று தொழில் புரிபவர்களில் 34 சத வீதமானோர் பெண்கள் என அமைச்சர் தலதா அத்துக்கோறள சுட்டிக் காட்டுகின்றார்.

இந்த எண்ணிக்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு வாரியத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள எண்ணிக்கையாகும். இதனை விட சிலர் சுற்றுலா விசாவில் சென்று தொழில் புரிவதாக அறிய முடிகின்றது.

இவர்களையும் சேர்த்தால் பொதுவாக 17 லட்சம் வரை இலங்கையர்கள் வெளிநாடுகளில் பணிபுரிவதாக இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு வாரியத்தின் தகவல்கள் மூலம் அறியமுடிகின்றது.