வெசாக் வாழ்த்துச் செய்தியில் சமத்துவத்தை வலியுறுத்தும் ஜனாதிபதியும், பிரதமரும்

புத்த பிரானின் காலத்தில் அடிப்படைக் கோட்பாடாகவிருந்த சமத்துவத்தையே இன்றைய உலகமும் உருக்கமாக வேண்டி நிற்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி விடுத்துள்ள வெசாக் வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகளின் 14ஆவது சர்வதேச வெசாக் விழாவின் முதன்மைப் பொறுப்பு எமக்கு வழங்கப்பட்டமைக்கு அண்மைக் காலத்தில் நாம் பெற்றுக் கொண்ட வெற்றிகளும் களம் அமைத்துக் கொடுத்துள்ளதாக ஜனாதிபதி கூறியுள்ளார்.

முப்பெரும் மங்கல நிகழ்வுகளில் ஒன்றாகிய புத்தபெருமானின் முக்திப்பேற்றுடன் ஆரம்பமாகும் எமது தேசத்தின் வரலாறானது, இம்முறை சர்வதேச வெசாக் விழா ஸ்ரீலங்காவில் நடத்தப்படுவதன் மூலம் புதியதோர் அத்தியாயத்தில் அடியெடுத்து வைக்கின்றது அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

“சமூக நீதி மற்றும் பேண்தகு உலக சமாதானத்திற்கான பௌத்த தர்மத்தின் போதனைகள்“ என்பதே ஸ்ரீலங்காவில் நடத்தப்படும் வெசாக்தினத்தின் தொனி பொருளாகும். சமத்துவமே சமூக நீதிக்கான அடித்தளமாகும். புத்த பிரானின் காலத்தில் அடிப்படைக் கோட்பாடாகவிருந்த சமத்துவத்தையே இன்றைய உலகமும் உருக்கமாக வேண்டி நிற்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அன்பினை அடிப்படையாகக் கொண்ட ஒற்றுமையான சமூகமொன்றைக் கட்டியெழுப்ப அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என்பதே சர்வதேச விசாக பண்டிகை தினத்தில் எமக்குள்ள முக்கிய சவால் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

புனித விசாக பண்டிகை தினத்தை முன்னிட்டு பிரதமர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, உலகவாழ் பௌத்த மக்களின் மிகவும் புனிதமான சமய முக்கியத்துவம் மிக்க தினமான வெசாக் நிகழ்வு, புண்ணிய கருமங்கள் உட்பட சமய வழிபாடுகளில் ஈடுபட்டு மிகவும் பக்தியுடன் கொண்டாடப்படும் தனிச்சிறப்பு மிக்க சமய நிகழ்வாகும். இம்முறை வெசாக் தினம் இலங்கையரான எமக்கு மற்றுமொரு வகையிலும் முக்கியத்துவம் பெறுகிறது.

இம்முறை ஐக்கிய நாடுகளின் 14ஆவது சர்வதேச விசாக பண்டிகை நிகழ்வு மற்றும் உலக பௌத்த மாநாடு என்பவற்றை இலங்கையில் நடத்த கிடைத்துள்ளமை மிகவும் பெறுமதியானதோர் சந்தர்ப்பமாகும் என்றார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]