வீரமரணம் அடைந்த மாவீரர்களை நினைவு கூறும் மாவீரர் நாள் இன்றாகும்!!

இலங்கையில் ஆட்சி செய்யும் தரப்புகள் அடக்குமுறைக்குள் இருந்து வீறுகொண்டு எழுந்து தனி நாடு கேட்டு போராடிய விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து வீரமரணம் அடைந்த மாவீரர்களை நினைவு கூறும் மாவீரர் நாள் இன்றாகும்.

வடக்கு கிழக்கில் விடுதலைப்புலிகளின் ஆட்சி காலத்தில் இன்றைய நாள் மிகவும் முக்கியம் வாய்ந்த ஒரு நாளாக ஒரு எழுத்து நாளாக அனுஷ்டிக்கப்பட்டு வந்தது.

மாவீரர் துயிலும் இல்லங்களில் மாவீரர் தினமான நவம்பர் 27ம் திகதியன்று மாவீரர்களின் பெற்றோர் நினைவுக்கற்களுக்கும், கல்லறைகளிற்கும் ஈகைச்சுடர் ஏற்றுவர். அதே வேளை அங்கமைந்திருக்கும் பொதுச் சுடரினை ஏற்றி மாலை 6.05 மணிக்கு மணிஒலி எழுப்பப்பெற்று சுடர் ஏற்றப்படும்.

மாவீரர்களின் பெற்றோர்கள் மற்றும் உறவினர் நண்பர்கள் தமது உறவுகளை நினைத்து கண்ணீர் விட்டு கதறியழும் உணர்வு மிக்க நாளாக இந்த நாள் அமையும்.

கடந்த 2009 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் அமைப்பு தமது செயற்பாடுகளை நிறுத்தி கொண்ட பின்னர் , மாவீரர் துயிலும் இல்லங்கள் இலங்கை இராணுவத்தால் அழித்து ஒழிக்கப்பட்டது.

கடந்த 2015 ஆம் ஆண்டு தொடக்கம் ஐக்கிய தேசிய கட்சி இதர கட்சிகளுடன் சேர்ந்து அமைத்த கூட்டாட்சியில் மீண்டும் மாவீரர்களை நினைவு கூறும் நாளுக்கு உத்தியோகபூர்வமில்லாத அனுமதி வழங்கப்பட்டு இருந்தது.

இதன் மூலம் நிர்மூலமாக்கப்பட்ட மாவீரர் துயிலும் இல்லங்கள் மீண்டும் புனரமைப்பு செய்யப்பட்டு மாதிரி துயிலுமில்லங்கள் அமைக்கப்பட்டு மாவீரர் தினம் மீண்டும் எழுச்சி பெற்றது.

இம்முறை கடந்த ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி ஆட்சிக்கு வந்த மஹிந்த ராஜபக்சவின் அரசு மாவீரர் தின அனுஸ்டிப்பு செய்ய தடை விதித்து அறிவிப்பு செய்தது.

எனினும் அதனை பொருட்படுத்தாமல் வடக்கு மற்றும் கிழக்கில் தமிழர் தாயக நிலப்பரப்புகளில் இன்றைய நாள் மிகவும் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட அனைத்து ஒழுங்குகளும் செய்யப்பட்டுள்ளது.

வடக்கு கிழக்கில் உள்ள மாவீரர் துயிலுமில்லங்கள் சிவப்பு மஞ்சள் கொடிகளால் அலங்கரிப்பு செய்யப்பட்டு மாவீரர் பதாதைகள் வைக்கப்பட்டு , நினவு கற்கள் நாட்டப்பட்டு பூரண எழுச்சி கோலம் பூண்டுள்ளது.

பல எதிப்புகளையும் மீறி யாழ் பல்கலைக்கழகம் மாவீரர் எழுச்சி நாளுக்கு முற்று முழுதாக அலங்கரிக்கப்பட்டு பூரண எழுச்சி கோலம் பூண்டுள்ளது.

மேலும் புலம் பெயர் தமிழர்கள் வாழ்ந்து வரும் அனைத்து நாடுகளிலும் இன்றைய நாள் மிகவும் சிறப்புடன் அனுஸ்டிக்கப்படவுள்ளமை முக்கிய விடயமாகும்.

எமது மக்களின் நிம்மதியான வாழ்வை மனதில் வைத்து தமது இன்னுயிர்களை தியாகம் செய்த எமது மாவீர செல்வங்களை இந்நாளில் நினைந்து எழுச்சி கொள்வோம்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]