விஸ்வாசம் படத்துக்கு சீட் பிடிப்பதில் ஏற்பட்ட மோதலில் ரசிகர்கள் கத்தியால் குத்து

விஸ்வாசம் படத்துக்கு சீட் பிடிப்பதில் ஏற்பட்ட மோதலில் ரசிகர்கள் கத்தியால் குத்திக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அஜித் – சிவா கூட்டணியில் உருவாகியுள்ள படம் விஸ்வாசம். இந்தப் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தில் தம்பி ராமையா, ஜகபதி பாபு, விவேக், யோகி பாபு, ரோபோ சங்கர், கோவை சரளா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இன்று வெளியான இந்தப் படத்தை ரசிகர்கள் ஆரவாரத்துடன் வரவேற்று கொண்டாடி வருகின்றனர். இந்தப் படம் குடும்பத்தின் அவசியத்தைப் பேசும் படமாக அமைந்துள்ளதாக பார்வையாளர்கள் கூறுகின்றனர். படத்தின் முதல்நாள் முதல்காட்சியை பார்த்துவிட வேண்டும் என்ற ஆர்வத்தில் ரசிகர்கள் இன்று அதிகாலை முதலே திரையரங்குகளில் குவியத் தொடங்கினர்.

இந்த நிலையில் வேலூர் அலங்கார் திரையரங்கில் விஸ்வாசம் திரைப்படம் சிறப்புக் காட்சி திரையிடப்பட்டது. அப்போது தாரபடவேடு பகுதியைச் சேர்ந்த பிரசாந்த், ஓல்டு டவுன் பகுதியை சேர்ந்த ரமேஷ் ஆகியோருக்கு இடையே, தியேட்டரில் சீட் பிடிப்பதில் தகராறு ஏற்பட்டுள்ளது. அஜித் ரசிகர்களுக்கு இடையே ஏற்பட்ட இந்த மோதலில் ஒருவரையொருவர் மாறிமாறி கத்தியால் குத்திக்கொண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து இருவரும் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். கத்தி குத்து வாங்கிய அஜித் ரசிகர் பிரசாந்த் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவத்தில் தொடர்புடைய 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]