விவசாய உற்பத்தியில் மட்டக்களப்பு மாவட்டம் தன்னிறைவு அடையும் -எம். பரமேஸ்வரன் நம்பிக்கை தெரிவிப்பு

மட்டக்களப்பு மாவட்டம் விவசாய உற்பத்தியில் தன்னிறைவு அடையும் இலக்கை விரைவில் எட்டும் என தான் உறுதியாக நம்புவதாக மட்டக்களப்பு மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளர் எம். பரமேஸ்வரன் தெரிவித்தார்.

தேசிய உணவுற்பத்தி நிகழ்ச்சித் திட்டத்தின்கீழ் மட்டக்களப்பு தாந்தாமலை விவசாய போதனாசிரியர் பிரதேசத்தில் சுமார் 5 ஏக்கர் நிலப்பரப்பில் வெவ்வேறு நிலங்களில் விளைவிக்கப்பட்ட விதை நிலக்கடலை அறுவடை விழா வியாழக்கிழமை 05.07.2018 நிலக்கடலை விவசாயியான கந்தசாமி யுகராஜின் தோட்டத்தில் இடம்பெற்றது.

மட்டக்களப்பு விவசாயத் திணைக்களத்தின் முழு வீச்சிலான ஒத்துழைப்புடன் அப்பகுதி விவசாயிகள் இந்த விதை நிலக்கடலை உற்பத்தி முயற்சியை மேற்கொண்டிருந்தனர்.

பிரதேச விவசாயப் போதனாசிரியர் வடிவேல் சுரேஸ்குமாரின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளர் எம். பரமேஸ்வரன், பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு பிரதேச விவசாயிகள் மத்தியில் உரையாற்றினார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய பரமேஸ்வரன், மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகள் எதிர்நோக்கும் விதை நிலக்கடலைப் பற்றாக்குறையைத் தீர்ப்பதற்கு மட்டக்களப்பு விவசாயத் திணைக்களம் எடுத்துக் கொண்ட அயராத முயற்சியின் காரணமாக சிறந்த நிலக்கடலை உற்பத்தி மேற்கொள்ளப்பட்டுள்ளது

மட்டக்களப்பு விவசாயத் திணைக்களத்தினதும் மாவட்ட விவசாயிகளினதும் அயராத முயற்சியினால் இந்தளவு சிறந்த விதை நிலக்கடலை உற்பத்தியை அறுவடை செய்ய முடிந்திருக்கின்றது.

இது எதிர்வரும் பெரும்போகத்திற்கான நிலக்கடலைச் செய்கைக்கான விதை நிலக்கடலைத் தேவையைப் பூர்த்தி செய்யக் கூடியதாக இருக்கும்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலக்கடலை உற்பத்தி படிப்படியாக அதிகரித்துக் கொண்டே வருகின்றது.

மாவட்டத்தில் கடந்த வருடம் 750 ஏக்கரில் செய்கைபண்ணப்பட்டு வந்த நிலக்கடலை இவ்வருடம் 1125 ஏக்கரில் செய்கை பண்ணப்பட்டிருக்கின்றது.

தனியார்துறையினரால் நிலக்கடலை நியாயமான விலையில் கொள்வனவு செய்யப்படுவதாலும் சிறந்த சந்தை வாய்ப்புக் கிடைத்து வருவதாலும் எதிர்வரும் பெரும்போகத்தில் மாவட்டத்தின் நிலக்கடலை உற்பத்தி இன்னும் அதிகரிக்கக் கூடும்.

இத்தகைய முயற்சி மாவட்டத்தின் உப உணவுத் தேவையை உள்ளுரிலேயே உற்பத்தி செய்யும் தன்னிறைவைத் தரும் என எதிர்பார்ப்பதோடு விவசாயிகள் மத்தியில் ஊக்கத்தையும் அளித்துள்ளது.

இதேபேன்று ஏனைய உப உணவுப் பயிர்களான கௌபி, உழுந்து, பயறு, சோளன், சோயா, ஆகியவற்றையும் உள்ளுரிலேயே உற்பத்தி செய்து கொள்ள வேண்டும்.

இதன்மூலம் எமது வளங்கள் அனைத்தும் வீண் விரயமாகாமல் பயன்படுத்தப்படுவதோடு, பொருளாதாரமும் மேம்படும்.

மேலும் உள்ளுர் உற்பத்தியிலும் நம்பிக்கை ஏற்படும்.

விவசாய உற்பத்தியில் விவசாய உற்பத்தியில் விவசாய உற்பத்தியில்

இவ்வாறு உற்பத்திகளை அதிகரித்து வெளிநாட்டிலிருந்து வரும் இறக்குமதிகளைக் குறைக்க வேண்டும். இதுதான் அரசாங்கத்தினதும் விவசாயத் திணைக்களத்தினதும் நோக்கமாகும். எனவே, நமது வளங்களிலும் நமது திறமைகளிலும் அபார நம்பிக்கை வைத்து அயராத முயற்சியில் ஈடுபட்டால் மட்டக்களப்பு மாவட்டம் விவசாயத்தில் தன்னிறைவு காணும்” என்றார்.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு தெற்கு வலய விவசாய உதவிப் பணிப்பாளர் மங்களகேசரி சிவஞானம், நெற்பயிருக்கான பாடவிதான உத்தியோகத்தர் எஸ். சித்திரவேல், மறுவயற் பிரிவு பாட விதான உத்தியோகத்தர் என். கணேசமூர்த்தி, விதை அத்தாட்சிப்படுத்தும் உத்தியோகத்தர் ஐ. ஜெயச்சந்திரன், மற்றும் விவசாயிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]