விளையாட்டுத்துறையில் அரசியல்வாதிகளின் தலையீடு ஆபத்து : தயாசிறி ஜயசேகர

விளையாட்டுத்துறையில் அரசியல்வாதிகளின் தலையீடு தொடருமானால் அது ஆபத்தான விடயம் என்று விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட் வீரர்களுக்கான உள்ளக விளையாட்டரங்கு பல்லேகலயில் நேற்று (09) திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் திலங்க சுமதிபால உள்ளிட்ட கிரிக்கெட் நிறுவனத்தின் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

விளையாட்டுத்துறைக்கான கொள்கைகளை வகுப்பதை நான் தனியாகப் பார்த்துக்கொள்வேன். அது என்னுடைய தனிப்பட்ட பொறுப்பாகும். ஆனால், எனக்கு கீழ் 60 விளையாட்டுச்சங்கங்கள் செயற்படுகின்றன. அந்த சங்கங்களின் தலைவர்கள் ஜனநாயக முறையிலேயே தெரிவு செய்யப்படுகின்றனர்.

அவ்வாறு தெரிவு செய்யப்படுகின்ற தலைவர்கள் தமது பொறுப்புக்களை உணர்ந்து செயற்பட வேண்டும். விளையாட்டுப் பிரிவுகளை முன்னோக்கி கொண்டு செல்வதற்காக முனைப்புக்களை மேற்கொள்ள வேண்டும்.

குறிப்பிட்ட வருடத்திற்குள் அவர்களுடைய பொறுப்புக்களை உணர்ந்து செயற்படவில்லையாயின் புதிய குழுவொன்று தோற்றம் பெறும். அரசியல்வாதிகள் விளையாட்டுத்துறையில் தலையீடு செய்வதனாலேயே இவ்வாறான நிலைமை ஏற்படுகிறது.

அவர்கள் விரும்பிய நபர்களை தெரிவு செய்ய முற்படுகின்றனர். இவ்வாறான நிலை தொடருமாக இருந்தால், விளையாட்டுத்துறையை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல முடியாது என்றும் கூறினார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]