விமான நிறுவன மோசடி விசாரணை ஆணைக்குழு வர்த்தமானி தயார்

ஸ்ரீலங்கன் விமான சேவை, மிகின் லங்கா விமான நிறுவனம் ஆகியவற்றில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பாக விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவை அமைக்கும் வர்த்தமானி அறிவிப்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நேற்று கையெழுத்திட்டார்.

மேற்படி இரண்டு நிறுவனங்களிலும், 2006 ஜனவரி 1ஆம் திகதிக்கும், 2018 ஜனவரி 31ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலத்தில் இடம்பெற்ற மோசடிகள், முறைகேடுகள் குறித்து, ஐந்து பேர் கொண்ட இந்த ஆணைக்குழுவுக்கு, அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த வர்த்தமானி அறிவிப்பு நேற்று நள்ளிரவு வெளியிடப்பட்டுள்ளது.

ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் அனில் குணரத்ன, மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி காமினி றொகான் அமரசேகர, மேல்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி பியசேன ரணசிங்க, முன்னாள் பிரதி கணக்காய்வாளர் நாயகம் மல்லவாராச்சி டொன் அன்ரனி ஹெரால்ட், கணக்காய்வு தர கண்காணிப்பு சபையின் பணிப்பாளர் வசந்த ஜெயசீலி கபுகம ஆகியோர் இந்த ஆணைக்குழுவின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர் என்று ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.