தமிழர்களின் வீதாசாரத்தினை முற்றுமுழுதாக குறைப்பதற்கான நடவடிக்கைகள் – விநாயகமூர்த்தி முரளிதரன்

தமிழர்களின் வீதாசாரத்தினை முற்றுமுழுதாக குறைப்பதற்கான நடவடிக்கைகள் – விநாயகமூர்த்தி முரளிதரன்

விநாயகமூர்த்தி முரளிதரன்

மதுறுஓயா திட்டம் என்னும் பெயரில் பெரும்பான்மை இன மக்களை குடியேற்றி கல்குடா தொகுதியில் தமிழர்களின் வீதாசாரத்தினை முற்றுமுழுதாக குறைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக முன்னாள் மீள்குடியேற்ற பிரதியமைச்சரும் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) குற்றம் சுமத்தியுள்ளார்.

இத்திட்டம் தொடர்பில் எதிர்க்கட்சி தலைவருக்கோ தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கோ மாகாணசபை உறுப்பினர்களுக்கோ எதுவும் தெரியாது அவர் கூறினார்.

மட்டக்களப்பு கல்லடியில் நேற்று (15) ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில் – மதுறுஓயா திட்டம் என்பது மகாவலி திட்டத்தின் கீழ் இடதுகரை வாய்க்கால் புனரமைக்கப்பட்டு அரளகன்வில போன்ற பொலன்னறுவை மாவட்டத்தின் அரைவாசிக்கும் மேற்பட்ட பகுதிகள் உள்ளடக்கப்பட்டு அபிவிருத்தி செய்யப்பட்டிருந்தது. ஆனால் வலதுகரை வாய்க்கால் தொப்பிகல பிரதேசமாகும்.

மகாவலி அபிவிருத்தி சபை எதுவித தகவல்களையும் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வழங்காமல் ஆய்வுகளை மேற்கொண்டு தற்பொழுது அதை அமுலாக்குவதற்கான இறுதிக் கட்டத்திற்கு வந்திருக்கின்றார்கள். இதனால் கிரான் பிரதேச சபைக்குட்பட்ட நான்கில் மூன்று பங்கு நிலப்பரப்பு உள்வாங்கப்படவிருப்பதால் பாரிய பாதிப்புகள் ஏற்படவுள்ளன. செங்கலடி பிரதேச செயலாளல் பிரிவுக்குட்பட்ட ஈரளக்குள பிரதேசங்களும் இந்த திட்டத்திற்குள் உள்வாங்கப்படவிருக்கின்றன.

இந்த திட்டத்தில் 15500 ஹெக்டெயர் நிலப்பரப்பு உள்வாங்கப்படவிருக்கின்றன. 472.5 மில்லியன் அமெரிக்க டொலர்; இந்தத் திட்டத்திற்காக செலவு செய்யப்படவிருக்கின்றது. சீன வங்கியில் காசு பெறப்பட்டு சி.எம்.சி என்ஜினியரிங் என்ற கம்பனிக்கு ஒப்பந்தத்திற்கு வழங்கப்பட்டிருக்கின்றது.

மதுறுஓயா திட்டத்தில் 597 எம்.சி.எம் நீரின் கொள்ளளவு உள்ள போதிலும் வாகனேரி குளத்தில் நீர்த்தட்டுப்பாடு ஏற்படும் சமயத்தில் நீரை கேட்டாலும் அவர்கள் பற்றாக்குறையை காரணம் காட்டி நீரை வழங்க மாட்டார்கள். இதன் காரணமாக முற்றுமுழுதாக நில அபகரிப்பிற்காக அமுல்படுத்தப்படுகின்ற திட்டமாகவே இதனை நாங்கள் பார்க்கின்றோம்.

இத்திட்டத்தினூடாக தொப்பிகல பிரதேசத்தில் 11800 குடும்பங்கள் குடியேற்றப்பட வேண்டும். இவற்றில் விவசாய குடும்பங்கள் 9000 விவசாய குடும்பங்களும் ஏனைய 2800 குடும்பங்களும் உள்ளடங்கும்;. கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலக பிரிவில் வடமுனை, ஊத்துச்சேனை, கள்ளிச்சை, பேரலாவெளி, குடும்பிமலை, முறுத்தானை மற்றும் புனானை போன்ற பிரதேசங்கள் முற்றுமுழுதாக உள்வாங்கப்படுகின்றது.

அதேபோன்று ஏறாவூர்பற்று பிரதேசசெயலக பிரிவில் ஈரளக்குளம் மற்றும் மகாஓயா பிரதேச செயலக பிரிவில் பொகொம்பயாய போன்ற பிரதேசங்கள் முற்றுமுழுதாக உள்வாங்கப்படுகின்றது.

70வீதம் கரும்புச் செய்கைக்கும் 30வீதம் நெற்பயிர்ச செய்கைக்குமாக இத்திட்டத்தை அவர்கள் கொண்டுவந்திருக்கின்றார்கள். மகாவலி அதிகார சபையின் ஆய்வின்படி தற்போது அங்கு வாழ்கின்ற மக்கள் தொகை 2883 என குறிப்பிட்டிருக்கின்றார்கள். 887வீடுகளும் 775 குடும்பங்களும் அங்கு வாழ்கின்றனர். 775 குடும்பங்களே அங்கு இருக்கின்றன என்றால் குடியேற்றப்படவிருக்கின்ற 11800குடும்பங்களில் மிகுதி யார் என்ற கேள்வி அங்கு பாரிய பிரச்சனையாக உருவெடுத்திருக்கின்றது.

மகாவலி அபிவிருத்தி அதிகார சபையின் தற்போதைய கணக்கெடுப்பின்படி 575 ஏக்கர் மேட்டு நிலம் பயிர் செய்பவர்களுக்குத்தான் ஆவணங்கள் இருக்கின்றன என்றும் 2169 ஏக்கர் விவசாய நிலங்களுக்குத்தான் அத்தாட்சிப் பத்திரங்கள் இருக்கின்றன என்றும் சொல்லப்பட்டிருக்கின்றது.

ஏனைய காணிகளுக்கு அத்தாட்சிப் பத்திரங்கள் இல்லை என்றும் அங்கு பயிர் செய்யப்பட்டிருக்கின்ற காணிகள் கையகப்படுத்தப்படும் என்றும் கூறியிருக்கின்றார்கள்.

மட்டக்களப்பு மாவட்ட பிரதேச அதிகாரிகள், விவசாய ஆணையாளர்கள் ஊடாக ஆவணம் வழங்கப்பட்டு தற்போது தொப்பிகல் பிரதேசத்தில் தற்போது செய்கை பண்ணப்பட்டிருக்கின்ற காணிகளின் அளவு 13638ஏக்கர் ஆகும். ஆனால் மகாவலி அபிவிருத்தி அதிகார சபையின் ஆய்வின்படி 2169ஏக்கர் காணிகளே ஆவணம் வழங்கபட்டு பயிர் செய்யப்பட்டுள்ளதாக கூறியிருக்கின்றார்கள்.

இங்கு எழப்போகின்ற பெரிய பிரச்சனை என்னவெனில் 16382 ஏக்கர் காணிகளில் தற்போது எமது மக்கள் பயிர் செய்திருக்கின்றார்கள். இதற்கு ஆவணங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. 13638 ஏக்கர் காணி இத்திட்டத்தினூடாக பறிபோகப்போகின்றது. இத்திட்டத்தினூடாக பலஏக்கர் நிலங்கள் பறிபோகப்போகின்றது.

மகாவலி அபிவிருத்தி அதிகார சபையின் கணக்கெடுப்பின்படி தொப்பிகல பிரதேசத்தில் நிரந்தரமாக 986 சிங்கள குடும்பங்கள் வசிப்பதாக கூறியிருக்கின்றார்கள். ஆனால் இவர்கள் எங்கு இருக்கின்றார்கள் என்பது தெரியாது. இருக்கின்ற தமிழ்க் குடும்பங்களை விட சிங்கள குடும்பங்கள் அங்கு கூடுதலாக இருப்பதாக கணக்கிடப்பட்டிருக்கின்றது. இதிலிருந்து இத்திட்டத்தை பாரிய நிலஅபகரிப்பிற்கான திட்டமாக கருத முடியும்.

காணி அபகரிப்பு செய்யப்படவுள்ள இடங்கள் வன இலகாவுக்கு சொந்தமானது, அங்கு மிருகங்கள் வாழும் பகுதியாகும். இவற்றிற்கான அனுமதிப்பத்திரங்கள் உரியமுறையில் பெறப்படவில்லை. கிட்டத்தட்ட 41 தொல்பொருள் ஆராய்ச்சி இடங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.இந்த திட்டம் கொண்டுவரப்படுவதனால் 18 தொல்பொருள் ஆராய்ச்சி பகுதிகள் முற்றுமுழுதாக பாதிக்கப்படுகின்றது.

13638 ஏக்கர் நிலம் பறிபோகப்போகின்றது. 11000 குடும்பங்கள் குடியேற்றப்பட வேண்டும். இதில் 775 தமிழ் குடும்பங்களே அப்பகுதியில் இருக்கின்றது. 996 சிங்கள குடும்பங்கள் உள்ளதாக கூறப்படுகின்ற போதிலும் மிகுதியாகவுள்ள குடும்பங்கள் எங்கிருந்து வரப்போகின்றது என்ற கேள்வியெழுந்துள்ளது.

120,000 மாடுகள் மேய்ச்சல் தரைக்காக பயன்படுத்தப்படுகின்றது.இந்த திட்டத்தில் மேய்ச்சல் தரை தொடர்பில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. திட்டம் வரும்போது மேய்ச்சல் தரை அனைத்தும் அவர்களினால் பலவந்தமாக கையகப்படுத்தப்படும் என்றார் விநாயகமூர்த்தி முரளிதரன்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]