விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் புலனாய்வுத் தலைவருக்கு எதிராக பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் புலனாய்வுத் தலைவரும், புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப்புலிகள் கட்சியின் தற்போதைய தலைவருமான திருகோணமலையைச் சேர்ந்த கந்தசாமி இன்பராசா என்பவருக்கு எதிராக ஏறாவூர் மற்றும் வாழைச்சேனை பொலிஸ் நிலையங்களில் இருவேறு முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இனங்களுக்கிடையே முரண்பாடுகளைத் தோற்றுவிக்கும் வகையில் ஊடகங்கள் வாயிலாக கருத்துக்களை வெளியிட்டு வருவதாகக் கூறி இன்பராசாவுக்கெதிராக நடவடிக்கை எடுக்குமாறு கோரி இந்த முறைப்பாடுகள் இருவேறு சமூக ஆர்வலர்களால் பதிவு செய்யப்பட்டுள்ளன.

சமீபத்தில் கொழும்பில் ஊடகங்களை அழைத்து கருத்து வெளியிட்டிருந்த இன்பராசா முஸ்லிம்களிடம் ஆயுதம் உள்ளதாக பொதுவெளியில் கூறியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து இன்பராசாவின் கூற்றுக்கெதிராக அரசியல்வாதிகள், சமூக ஆர்வலர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் தமது எதிர்ப்புக்களையும் கண்டனங்களையும் வெளியிட்டு வந்தனர்.

அதற்கும் ஒருபடி மேலே சென்று இந்த முறைப்பாடகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இலங்கையிலுள்ள ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தின் மீதும் பொய்க்குற்றச்சாட்டைச் சுமத்தி, நாட்டில் இனங்களுக்கிடையில் குழப்ப நிலையை உருவாக்கவும், அரசியல் ரீதியான இலாபங்களை அடைந்து கொள்ளவும் முற்படும் தீய இனவாத சக்திகள் சட்ட ரீதியாகத் தண்டிக்கப்பட வேண்டும் எனவும் முறைப்பாட்டாளர்கள் இந்த முறைப்பாட்டில் கேட்டுள்ளனர்.

இந்த முறைப்பாடு குறித்து தாம் மேல் நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 விடுதலைப் புலிகள்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]