விஜய் மல்லையா லண்டனில் கைது

விஜய் மல்லையா லண்டனில் கைதுசெய்யப் பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

விஜய் மல்லையா
விஜய் மல்லையா

வங்கிக்கடன் மோசடி தொடர்பான தலைமறைவாக இருந்த இந்தியாவின் பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையாவை ஸ்காட்லாந்து யார்டு பொலிஸார் இன்று காலை கைது செய்துள்ளனர். விரைவில் அவரை இந்தியாவிற்கு கொண்டுசெல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா, பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி வரை கடன் வாங்கிவிட்டு அதை திரும்பச் செலுத்தவில்லை. இதனால், சட்டவிரோத பணபரிவர்த்தனை சட்டத்தின் கீழ், அவர் மீது இந்திய மத்திய அமலாக்கத்துறை கிரிமினல் வழக்குத் தொடர்ந்தது.

இது தொடர்பான வழக்கு இந்திய உச்ச நீதிமன்றில் நடைபெற்றுவரும் நிலையில், விஜய் மல்லையா தனது சிறப்பு கடவுசீட்டை பயன்படுத்தி லண்டனுக்குச் சென்று விட்டார். லண்டனில் தங்கி இருந்த அவருக்கு எதிராக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கப் பிரிவு பலமுறை அழைப்பானை அனுப்பியும் ஆஜராகாததால் அவருக்கு எதிராக பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது. அவரது கடவுசீட்டு முடக்கப்பட்டது.

விஜய் மல்லையா

அத்துடன், அவரை கைது செய்து இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொண்டது. அவரை நாடு கடத்தும்படி பிரிட்டன் அரசாங்கத்திடம் இந்தியா வேண்டுகோள் விடுத்து, அதற்கான ஆவணங்களையும் சமர்ப்பித்தது. அவற்றை பிரிட்டன் வெளியுறவுத்துறை சமீபத்தில் சரிபார்த்து ஒப்புதல் அளித்தது.

இந்நிலையில், லண்டனில் தலைமறைவாக இருந்த விஜய் மல்லையாவை ஸ்காட்லாந்து யார்டு பொலிஸார் இன்று காலையில் கைது செய்துள்ளனர். இதையடுத்து அவர் லண்டன் வெஸ்ட்மினிஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதுடன், விரைவில் அவரை இந்தியாவுக்கும் கொண்டுசெல்ல பிரிட்டன் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.

ஐபில் போட்டிகளில் பெங்களூர் அணியின் உரிமையாளராகவும் விஜய் மல்லையா கொடிகட்டி பறந்திருந்தார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]