விஜயகலா மீது தொடரும் ஒழுக்க விசாரணை

விஜயகலா மீது ஐக்கிய தேசிய கட்சி நடத்துகின்ற ஒழுக்க விசாரணை இன்னும் நிறைவடையவில்லை.

கட்சியின் சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் எமது செய்தி சேவைக்கு இந்த தகவலை வழங்கினார்.

விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீளுருவாக்குவதே தமது இலக்கு என்ற வகையில் அண்மையில் யாழ்ப்பாணத்தில் வைத்து விஜயகலா மகேஸ்வரன் கருத்து வெளியிட்டிருந்தார்.

இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்த நிலையில், அவர் தமது ராஜாங்க அமைச்சுப் பதவியில் இருந்தும் விலகினார்.

இந்த கருத்து தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக, ஐக்கிய தேசிய கட்சியினால் 4 பேர் கொண்ட குழு ஒன்று நியமிக்கப்பட்டு விசாரணைகள் இடம்பெற்றன.

இந்த குழுவின் கோரிக்கை அடிப்படையில், விஜயகலா மகேஸ்வரன் சட்டத்தரணி ஊடாக தன்னிலை விளக்கத்தை வழங்கி இருந்தார்.

இதன் அடிப்படையிலான அறிக்கை ஐக்கிய தேசிய கட்சியின் கடந்த செயற்குழு கூட்டத்தில் முன்வைக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தாலும், அந்த அறிக்கை முன்வைக்கப்படவில்லை.

ஒழுக்கவிசாரணை தொடர்ந்து இடம்பெறுகின்ற நிலையில், விரைவில் அந்த அறிக்கை நிறைவு செய்யப்பட்டு, கட்சித் தலைவரிடம் கையளிக்கப்படும் என்று குறித்த அமைச்சர் கூறினார்.

அதேநேரம், இந்த கருத்து தொடர்பில் ஒழுங்குசெய்யப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் காவற்துறைப் பிரிவு மேற்கொண்ட விசாரணைகளின் போது பதிவு செய்யப்பட்ட வாக்குமூலங்களை மொழிமாற்றம் செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]