வாழைச்சேனையில் இரு இனங்களிடையே முறுகல் – பட இணைப்பு

மட்டக்களப்பு வாழைச்சேனை எரிபொருள் நிரப்பு நிலைய சந்தியில் பஸ் தரிப்பு நிலையம் அமைப்பதற்காக அடிக்கல் நடப்பட்ட இடத்தில் ஆட்டோக்கள் நிறுத்தப்பட்டதனால் அப்பிரதேசத்தில் இன்று (27) வெள்ளிக்கிழமை தமிழ் – முஸ்லிம் இனங்களிடையே முறுகல் நிலை ஏற்பட்டது.

வாழைச்சேனை எரிபொருள் நிரப்பு நிலைய சந்தியை அண்மித்த பகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரனின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் பஸ் தரிப்பிடம் அமைப்பதற்காக வியாழக்கிழமை ((26) கோறளைப்பற்று பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் அடிக்கல் நடப்பட்டது.

அடிக்கல் நடப்பட்ட இடத்தினை மணலினால் மூடி ஓட்டமாவடியைச் சேர்ந்த ஆட்டோ சாரதிகள் தமது ஆட்டோக்களை நிறுத்தியுள்ளனர். குறித்த பகுதி பஸ் தரிப்பு நிலையத்துக்கு ஒதுக்கப்பட்டு வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் அடையாளமிடப்பட்டுள்ளது குறித்த இடத்தில் ஆட்டோகளை தரித்து நிற்க முடியாது என கூறியுள்ளனர். இதை ஆட்டோ சாரதிகள் ஏற்க மறுத்து வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து அப்பகுதியில் இரு சமூகங்களையும் சேர்ந்தவர்கள் கூடியதால் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டதனால் பதற்ற நிலை ஏற்பட்பட்டது.

குறித்த இடத்திலிருந்து ஆட்டோக்களை அகற்றி பஸ் தரிப்பு நிலையம் அமைப்பதற்கு இடமளிக்குமாறு வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து பொலிஸார் குவிக்கப்பட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டதும் போக்குவரத்துக்கு தடை ஏற்படாதவகையில் வீதியில் இருமருங்கிலும் கூடி நின்று போராட்டம் நடத்தினர்.

போராட்டம் நடைபெறும் போது அங்கு நின்ற தமிழ் இளைஞன் ஒருவன் மீது கல் வீச்சு தாக்குதல் இதையடுத்து கல் வீச்சுத் தாக்குதல் செய்தவரை கைதுசெய்யுமாறு கோசமிட்டு மீண்டும் வீதியை மறித்து போராட்டம் நடத்தினர்.

இதனால் மட்டக்களப்பு – திருமலை வீதியூடான போக்குவரத்து தடைப்பட்டது. இதைடுத்து பொலிஸார் மாற்றுப் பாதைவூடாக வாகனங்களை அனுப்பினர்.


குறித்த இடத்துக்கு வந்த சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சமந்த யட்டவர வருகைதந்து இரு சாராரையும் அழைத்து தங்கள் பக்கமுள்ள நியாயங்களை கேட்டறிந்தார்.

இங்கு நாடாளுமன்ற உறுப்பனிர் சீ.யோகேஸ்வரன் தெரிவிக்கையில் – கோறளைப்பற்று (வாழைச்சேனை) பிரதேச செயலகப் பிரிவுக்குச் சொந்த மாண குறித்த இடத்தில் பயணிகளின் நலன் கருதி கறுவாக்கேணி மக்களின் வேண்டுகோளுக்கு அமைய எனது பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் இரண்டு இலட்சம் ரூபா ஒதுக்கீடு செய்திருந்தேன்.

இது தொடர்பாக பிரதேச செயலகத்தினதினால் வீதி அபிவிருத்தி அதிகார சபை மற்றும் கோறளைப்பற்று பிரதேசசபை மற்றும் வாழைச்சேனை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டு உத்தியோக பூர்வமாக அடிக்கல் நடப்பட்டது.

ஆனால் எங்களால் நடப்பட்ட அடிக்கல் மூடப்பட்டு இந்த பகுதியில் ஆட்டோக்கள் நிறுத்தப்பட்டது சட்டத்திற்கு முரணானது. இது தொடர்பாக பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் இன்று (27) ஆராயப்பட்டு மீண்டும் குறித்த இடத்தில் பஸ் தரிப்பிடம் அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் பிரதேச ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவர் பிரதியமைச்சர் அமீர்அலி மற்றும் அரச திணைக்கள அதிகாரிகள் பங்ககேற்றிருந்தனர்.

தற்போது பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தின தீர்மானத்தை நடைமுறைப்படுத்த முடியவிலலை. இதற்கு சட்ட நடவடிக்கையெடுக்கவுள்ளேன் என்றார்.

இங்கு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சமந்த யட்டவர தெரிவிக்கையில் – பஸ் தரிப்பு நிலையம் தொடர்பான பிரச்சினைக்கு எதிர்வரும் திங்கட்கிழமை நீதிமன்றம் சென்று சட்ட ரீதியான தீர்வு பெற்றுத்தரப்படும் இதுவரை தற்போது அமைக்கப்பட்டுள்ள பஸ் தரிப்பு நிலைய கட்டடத்தை எவரும் சேதப்படுத்த கூடாது அவ்வாறு சேதமாக்கும் செயலில் ஈடுபடுபர்கள் மீது சட்ட நடவடிக்கையெடுக்கப்படும் என்றார்.

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.