வாள்வெட்டுக் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துமாறு இளஞ்செழியன் பணிப்புரை

வாள்வெட்டுக் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துமாறு இளஞ்செழியன் பணிப்புரை

இளஞ்செழியன்

யாழ்ப்பாணத்தில் அதிகரித்துள்ள வாள்வெட்டுக் குழுமோதல் சம்பவங்களை கட்டுபடுத்தும் வகையில் அவற்றில் ஈடுபடும் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துமாறு வட மாகாணத்தின் சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபருக்கு யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் அவசர பணிப்புரையை பிறப்பித்துள்ளார்.

யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி, அரச சட்டவாதி நாகரட்னம் நிஷாந் மற்றும் வடமாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட பொலிஸ் குழுவினருக்கு இடையில் இன்று (16.11) இடம்பெற்ற விஷேட கூட்டத்திலேயே இவ்வாறு பணிப்புரையானது நீதிபதியால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

யாழ்.மேல் நீதிமன்றில் நேற்று வாள்வெட்டு தொடர்பான வழக்கின் பிணை விண்ணப்பமானது பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தது. இப்பிணை விண்ணப்பத்தின் மீதான விசாரணையில் அரச சட்டவாதி, தற்போது யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டு குழுமோதல் போன்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளதுடன் இதனால் சாதாரண மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிப்படைந்தும், அம்மக்கள் அச்சத்திலும் பொழுதை கழித்து வருகின்றார்கள்.

இவ்வாறான நிலையில் இக் கைக்குண்டு வைத்திருந்த மற்றும் வாள்வெட்டு போன்ற சம்பவங்களில் ஈடுபட்ட நபருக்கு பிணை வழங்குவது சமூகத்தின் பாதுகாப்பை மேலும் கேள்விக்குள்ளாகிவிடும் என குறிப்பிட்டு அப்பிணை மனுவுக்கு ஆட்சேபனை தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து நீதிபதி அப்பிணை மனுவை நிராகரித்து அதனை ஒத்திவைத்ததுடன், வாள்வெட்டு கலாச்சாரத்தை உடன் கட்டுபடுத்துமாறு வடமாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபருக்கு உத்தரவு பிறப்பித்திருந்தார். இவ்வாறான சூழ்நிலையிலேயே இன்று (16.11) நீதிபதியின் உத்தரவுக்கமைய மேற்படி விஷேட கூட்டமானது ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

இவ் விஷேட கூட்டமானது இன்று காலை 9.30 மணியில் இருந்து நண்பகல் 12 மணிவரை இடம்பெற்றிருந்தது. இதில் வடமாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் பாலித்த பேனார்ன்டோ, யாழ்.மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ரொசான் பேனார்ன்டோ, சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் செனவிரட்ண, பொலிஸ் அத்தியட்சகர் அம்பேபிட்டிய மற்றும் யாழ்.தலைமை பொலிஸ் நிலைய தலைமை பொலிஸ் பரிசோதகர் ஹெமாவிதாரன ஆகியோர் கலந்துகொண்டிருந்ததனர்.

யாழ்ப்பாணத்தில் தற்போது கடந்த நான்கு ஜந்து நாட்களாக வாள்வெட்டுச் சம்பவங்கள் அதிகரித்துள்ளது. இவ்வாறான தொடர்ச்சியான வாள்வெட்டு சமபவங்கள் இடம்பெறுவதானது, சட்டம் ஒழுங்கிற்கு சவால்விடுகின்ற செயற்பாடகவே காணப்படுகின்றது. இதனை உடனடியாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட வேண்டும்.

எனவே சட்டம் ஒழுங்கிற்கு அச்சுறுத்தலாகவுள்ள இவ் வாள்வெட்டு கலாச்சாரத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் வகையில் பொலிஸ் திணைக்களத்தின் அனைத்து பிரிவுகளையும் பயன்படுத்தி இத்தகைய சமூக விரோத சமூகத்தவர்களுக்கு அச்சுறுத்தலான வாள்வெட்டு தாக்குதலில் ஈடுபடுவர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என வடமாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபருக்கு அவசர பணிப்புரையை பிறப்பித்திருந்தார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]