வவுனியாவில் 64 வயதான நபர் ஒருவர் காயங்களுடன் சடலமாக மீட்பு

வவுனியா, உக்கிளாங்குளம், 4 ஆம் ஒழுங்கைப் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து நெற்றி மற்றும் கை என்பவற்றில் காயங்களுடன் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் ஒன்று நேற்று மாலை வவுனியா காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த 64 வயதான செ.சிவராஜா என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த வீட்டில் சம்பவ நேரம் தந்தையும் மகளும் இருந்துள்ள நிலையில் மகள் உறங்கியுள்ள நிலையில் தந்தையார் வீட்டில் இருந்துள்ளார்.இந்தநிலையில் நித்திரை விட்டு எழுந்த மகள் தந்தையை தேடிய போது வீட்டின் முன் வாயில் பகுதியில் உள்ள தண்ணீர் பம்பி அருகில் தந்தையார் விழுந்து கிடந்ததை அவதானித்து அயலவர்கள் மற்றும் உறவினர்களின் உதவியுடன் தந்தையை எழுப்ப முயன்ற போது அவரது நெற்றி மற்றும் கை என்பவற்றில் காயங்கள் காணப்பட்டமையும், மரணித்து இருந்தமையும் அவதானிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து காவல்துறையினருக்கு வழங்கிய முறைப்பாட்டையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பண்டாரிக்குளம் காவல்துறையினர் சடலத்தை பார்வையிட்டதுடன், சடலத்தில் காயங்கள் காணப்பட்டமையால் வவுனியா தடயவியல் காவல்துறையினருக்கு அறிவவித்துள்ளனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற தடயவியல் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் சடலம் பிரேத பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]