முகப்பு News Local News வவுனியாவில் இராணுவ வீரர் ஒருவர் கைது

வவுனியாவில் இராணுவ வீரர் ஒருவர் கைது

வவுனியாவில் உள்ள அரச வங்கி ஒன்றின் தன்னியக்க இயந்திரத்தில் மோசடியான முறையில் பிறிதொரு நபரின் ஏரிஎம் அட்டையை பயன்படுத்தி பணம் பெற்ற சந்தேகத்தில் இராணுவ வீரர் ஒருவர் வவுனியா பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று இரவு 9 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

முல்லைத்தீவு பகுதியில் உள்ள இராணுவ முகாம் ஒன்றில் கடமையாற்றும் இராணுவ வீரர் (வயது 41) ஒருவர் விடுமுறை பெற்று வீடு செல்கின்றார்.

குறித்த இராணுவ வீரர் வவுனியா நகரில் உள்ள பழைய பேருந்து தரிப்பிடத்தில் நின்று கொண்டு அங்கு நின்ற தமிழ் பெண் ஒருவரிடம் அரச வங்கி ஒன்றின் ஏரிஎம் அட்டை மற்றும் இரகசிய இலக்கத்தை கொடுத்து பணம் பெற்று தருமாறு கோரியுள்ளார்.

அப்பெண்ணும் குறித்த ஏரிஎம் அட்டையுடன் சென்று நகரில் உள்ள பிறிதொரு அரச வங்கியின் தன்னியக்க இயந்திரத்தில் இரண்டு கட்டமாக பணம் எடுத்துள்ளார். பெண் அங்கு காவல் கடமையில் நின்ற உத்தியோகத்தரின் உதவியுடன் பணத்தை எடுத்ததுடன், வங்கியின் தன்னியக்க இயந்திரத்திற்கு சென்ற ஊடகவியலாளர் ஒருவரிடம் பணத்தை எண்ணி சரிபார்க்க கொடுத்துள்ளார்.

இதன்போது அப் பெண் வைத்திருந்த ஏரிஎம் அட்டைக்கும் பெண்ணுக்கும் சம்மந்தமில்லாமையை குறித்து ஊடகவியலாளர் வங்கியில் காவல் கடமையில் இருந்தவருக்கு தெரியப்படுத்தியதையடுத்து அங்கு வந்த வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை உறுப்பினர் நா. கிசாந்தன் மற்றும் சிலர் இணைந்து அந்த பெண்ணிடம் விசாரித்த போது அவர் இராணுவ வீரரை இனங்காட்டியதுடன், அவர் தந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இதனயைடுத்து அந்த இராணுவ வீரரை விசாரித்த போது தனக்கு கண் பார்வை இல்லாமையால் ஏடிஎம்அட்டையை அப்பெண்ணிடம் வழங்கியதாக முன் பின் முரணாக பேசியதுடன், அங்கிருந்து ஓட முற்பட்டுள்ளார். இதனையடுத்து பிரதேச சபை உறுப்பினர் நா. கிசாந்தன் மற்றும் அங்கு திரண்ட இளைஞர்கள் இராணுவ வீரரை பிடிக்க முயன்றுள்ளனர்.

அவர் தான் அணிந்திருந்த மேலங்கியை கழற்றி விட்டு பழைய பேருந்து நிலையத்தின் பின்புறமாக உள்ள வீடுகளின் மதில்களைப் பாய்ந்து ஓடியுள்ளார். இதன்போது பிரதேச சபை உறுப்பினரும் வேறு சில இளைஞர்களும் இணைந்து வவுனியா உள்வட்ட வீதியில் உள்ள சிந்தாமணி பிள்ளையார் ஆலயத்திற்கு அருகில் வைத்து இராணுவ வீரரை பிடித்தனர்.

இதன்போது பிறிதொரு ஊடகவியலாளர், வவுனியா பிரதி பொலிஸ்மா அதிபர் காரியாலயத்தில் உள்ள தமிழ் மொழி மூல முறைப்பாட்டு பிரிவுக்கு தகவல் வழங்கியதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வவுனியா பொலிசார் இராணுவ வீரரை கைது செய்தனர்.

அவரிடம் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணைகளில் அவர் பெண் ஒருவரின் மூலம் பணம் பெற்ற ஏரிஎம் அட்டை அவருடையது இல்லை என்பது தெரியவந்ததுடன், அவ்அட்டைக்குரிய நபரின் தகவல்களையும் வழங்க முடியாது தடுமாறியுள்ளார்.

இதனையடுத்து இராணுவ வீரர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான விசாரணைகளை வவுனியா பொலிசார் முன்னெடுத்து வருகிறார்கள்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com