வலி கிழக்குப் பிரதேச சபையை இம்முறை க. கதிர்காமநாதன் தலைமையிலான சுயேட்சைக் குழு கைப்பற்றும் – சோ.தேவராஜா

சோ.தேவராஜா

வலி கிழக்குப் பிரதேச சபையை இம்முறை க. கதிர்காமநாதன் (தோழர் செல்வம்) தலைமையிலான சுயேட்சைக் குழு கைப்பற்றும் – சட்டத்தரணி சோ.தேவராஜா உறுதி.

இம்முறை உள்ளூராட்சிச் சபைத் தேர்தலில் வலி கிழக்கு மக்களைக் கடந்த காலங்களைப் போல ஏமாற்ற முடியாது. ஏனெனில், தம்முடைய தேவைகளைச் சரியாகப் புரிந்துகொண்ட மக்கள் தாமே இம்முறை சுயேட்சை அணியாக வாளிச் சின்னத்தில் வலி கிழக்கு உள்ளூராட்சிச் சபைக்கான தேர்தலில் நேரடியாக இறங்கியுள்ளனர் எனச் சட்டத்தரணி சோ.தேவராஜா அவர்கள் கடந்த 08.01.2017 அன்று நவகிரியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துக்கூறும்போது தெரிவித்தார்.

மேலும் அவர், இனம், மொழி, மதம் என்று மக்கள்முன் கூவிவிட்டுப் பின்னர் தமது சுய நலன்களுக்காக மக்களை விற்கும், ஊழல் ஏமாற்றுப் பேர்வழிகளைச் சரியாக இனங்கண்ட மக்கள், அவர்களை நிராகரித்து உண்மையான மக்கள் போராளிகளை, மக்கள் பணிக்காகவே தனது வாழ்வு முழுவதையும் அர்ப்பணித்த தோழர் க. கதிர்காமநாதன் அவர்களைத் தலைவராகக் கொண்ட சுயேட்சைக் குழவாக வாளிச் சின்னத்தில் இம்முறை வலி கிழக்கு பிரதேச சபைக்கான தேர்தலில் களமிறங்கியுள்ளனர்.

இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட காணிகளின் விடுவிப்பு, அரசியல் கைதிகளின் விடுவிப்பு, காணாமலாக்கப்பட்ட உறவுகளைத் தேடிய போராட்டம், சுன்னாகம் நிலத்தடி நீர் மாசுபடுத்தப்பட்டமைக்கு எதிரான போராட்டம், சம்பூர் நிலக்கரி மின்னிலையத்திற்கு எதிரான போராட்டம், பெண்கள் சிறுவர்களுக்கெதிரான வன்கொடுமைகளுக்கு எதிரான போராட்டம், கல்வியையும் சுகாதாரத்தையும் தனியார்மயப்படுத்தலுக்கு எதிரான போராட்டம், மக்கள் குடியிருப்புகளுக்கு அத்தியில் உள்ள மயானங்களை அகற்றக் கோரிய தொடர் போராட்டம் என இன ரீதியான, பால் ரீதியிலான, சூழல் சார்ந்த அனைத்து அநீதிகளுக்கு எதிராகவும் குரல்கொடுத்துவந்த மக்கள் அவற்றை வெல்வதற்கான ஒரு மார்க்கமாக, தமக்கான பிரதிநிதித்துவத்தைத் தாமே உறுதிசெய்யும் வகையில் இத் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

இது இலங்கையின் அரசியல் வரலாற்றிலே இடம்பெற்றதொரு பாரிய பாய்ச்சலாகவே பலராலும் ஆச்சரியத்துடன் நோக்கப்படுகின்றது. இவ்வாறானதொரு மக்கள் அணி இதுவரை தேர்தலில் கலந்துகொண்டதில்லை. எனவே இம்முறை வலி கிழக்குப் பிரதேச சபையை க. கதிர்காமநாதன் (தோழர் செல்வம்) தலைமையிலான சுயேட்சைக் குழு கைப்பற்றி தொழிலாளர், விவசாயிகளின் அனைத்துவகையான தேவைகளையும் நிறைவேற்றுவதன்மூலம் இலங்கையிலேயே முன்னுதாரணமானதொரு பிரதேச சபையாக வலி கிழக்கை அது உருவாக்கும் எனத் தெரிவித்தார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]