வர வர காதல் கசக்குதா? ஏன்னு தெரிஞ்சுக்க இத படிங்க!

காதல் என்பது என்றும் மாறாமல் நிலையாக இருக்க வேண்டிய ஒன்று. ஆனால் நமக்கு முதல் நாள் இருந்த காதல் உணர்வும் புரிதலும் வாழ்நாள் முழுவதும் அதே போன்று நீடிப்பதில்லை. சற்றே சிந்தித்து பாருங்கள், முதல் நாள் இருந்த அதே காதலும், புரிதலும், விட்டுக்கொடுத்துப்போகும் குணமும் வாழ்நாள் முழுவதும் அப்படியே இருந்துவிட்டால் வாழ்க்கை எவ்வளவு அழகாக இருக்கும் என்று..!

ஏன் காதல் நாட்கள் செல்ல செல்ல வெறுப்புடன் பார்க்கப்படும் ஒரு விஷயமாகிறது? அதற்கு என்ன தான் காரணமாக இருக்க முடியும் என்பதை இந்த பகுதியில் காணலாம்.

காதல் வார்த்தைகள்

காதலின் ஆராம்பத்தில் நீங்கள் நிறைய தடவை ‘நான் உன்னை காதலிக்கிறேன்’ ‘நீ மட்டும் தான் என் உலகம்’ போன்ற ஆசை வார்த்தைகளை கூறி இருப்பீர்கள். இது இயல்பு தான். ஆனால் நம்மில் எத்தனை பேர் காதலில் இரண்டு வருடத்தை கடந்த பிறகும் கூட நிலையாக அதே மனநிலையில் இருக்கிறோம்? சொல்லும் வார்த்தைகள் மனதை மகிழ்விக்கும் என்றாலும், சொல்லிய வார்த்தையில் உள்ள உண்மையை உங்கள் துணை உணரும் போது காதல் வலுவாகும்.

பயம் சாதாரணமானது

உங்கள் துணைக்கு நீங்கள் அவரை விட்டுவிட்டு போய்விடுவீர்களோ என்ற பயம் வருவது இயல்பு தான். அவர் அதற்காக செய்யும் சில விஷயங்கள் உங்களை கோபப்படுத்தலாம். ஆனால் அதற்காக நீங்கள் ஆத்திரம் அடையவோ அல்லது அவருக்கு உங்கள் மீது நம்பிக்கை இல்லையோ என்று நினைக்க கூடாது. அவரது மனதை புரிந்து கொண்டு அவருக்கு உங்கள் மீது முழுநம்பிக்கை வருமாறு நடந்துகொள்ளுங்கள். அவரது பாதுகாப்பின்மையை போக்குவது உங்களது கையில் தான் உள்ளது.

உங்களுக்கும் நேரம் ஒதுக்குங்கள்

சிலர் காதலிக்கிறேன் என்று சொல்லிவிட்டு தனது அத்தனை சந்தோஷங்களையும் விட்டுவிட்டு தனது வாழ்க்கையையே தன் துணையின் காலடியில் வைத்துவிட்டு, கொஞ்ச காலம் கழித்து, காதல் போதை தெளிந்ததும், வாழ்க்கையே உன்னால தான் போச்சுனு ஒரு வார்த்தையை சொல்லிவிடுவார்கள். எனவே நீங்கள் உங்களது தனிப்பட்ட வாழ்க்கைக்கும் சற்று நேரம் ஒதுக்க வேண்டியது அவசியம். இதனால் இருவரும் இயல்பான வாழ்க்கையை வாழ முடியும்.


அதிகமாக பாதிக்கப்படுகிறீர்களா?

இன்று நாம் சினிமா, சீரியல் என பார்த்து அதே போல இருக்க வேண்டும் என நினைக்கிறோம். ஆனால் சினிமாவில் வாழ்க்கையின் முழுமையும் காட்டுவதில்லை. சில நேரம் சந்தோஷமும், சில நேரம் கஷ்டமும் வந்து போவது இயல்பு தான். காதலை பொருத்தவரை இதனை பெரிதாக எடுத்துக்கொள்ள கூடாது. நீங்கள் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் அதிகமாக காயப்பட்டுள்ளீர்களா? இனி இவருடன் வாழவே முடியாது என்ற நிலையில் பிரிவை பற்றி பரஸ்பரமாக பேசி முடிவெடுக்கலாம்.

குறைகூற வேண்டாம்

எந்த ஒரு விஷயத்திலும் இது உன்னால் தான் நடந்தது. நீ தான் காரணம் என பழைய புராணங்களை எல்லா சண்டைகளிலும் பாடுவதை தயவு செய்து நிறுத்துங்கள். இவை வாழ்க்கைக்கு சற்றும் உதவாது. உங்கள் துணையின் மனதை காயப்படுத்துவது உங்கள் தேவையா? அல்லது அவருடன் மகிழ்ச்சியாக வாழ்வது உங்கள் நோக்கமா என்பது உங்கள் கையில் தான் உள்ளது.

மனம் திறந்து பேசுங்கள்

உங்களது உறவில் உள்ள நிறை குறைகளை மனம் திறந்து பேசுங்கள். எவ்வளவோ நேரத்தை வீணாக்குகிறோம். ஏன் வாழ்க்கைக்காக சற்று நேரத்தை செலவழிக்க கூடாது. வாரத்தில் ஒரு நாள், ஒரு மணி நேரமாவது உங்களது வாழ்க்கை மற்றும் தேவைகளை பற்றி இருவரும் பேசி தெரிந்து கொள்ளுங்கள்.

மனதில் இடைவெளி வேண்டாம்

ஒரே வீட்டில் இருந்தாலும், இரு மனமும் இணையாமல் வெவ்வேறு பாதையில் சென்றால் பயனில்லை. நீங்கள் உங்களது துணையிடம் உங்கள் மனதில் உள்ள அனைத்தையும் தாராளமாக பேசுங்கள். அவரது வார்த்தைக்கும் மதிப்பளிக்க வேண்டியது அவசியம்.

உறவு ஒரு கண்ணாடி

ஒவ்வொரு உறவும் கண்ணாடியை போன்றது தான். நீங்கள் அன்பை காட்டினால் அன்பை காட்டுவார்கள். வெறுப்பை காட்டினால் அவர்களும் வெறுப்பை தான் காட்டுவார்கள். நீங்கள் வெறுப்பை காட்டினாலும் உங்கள் துணை அன்பை தான் காட்ட வேண்டும் என நினைக்காதீர்கள். முதலில் உங்கள் பக்கம் உள்ள தவறுகளை திருத்திக்கொள்ள வேண்டியது அவசியம்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]