வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைக்காலத் தடை – உயர் நீதிமன்றம் சற்றுமுன் அதிரடி உத்தரவு

நாடாளுமன்றத்தை கலைத்த ஜனாதிபதியின் உத்தரவிற்கு உயர்நீதிமன்றம் இடைக்கால தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது.

வரும் டிசம்பர் 07ம் திகதி வரை தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் வர்த்தமானி அறிவிப்பிற்கு இணங்க, பொதுத்தேர்தலிற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்ட தேர்தல்கள் ஆணைக்குழுவின் நடவடிக்கைக்கும் இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பிரதம நீதியரசர் நளின் ஜயலத் பெரேரா, பிரசன்ன ஜெயவர்த்தன, பிரியந்த ஜயவர்த்தன ஆகிய மூன்று நீதிபதிகளை கொண்ட ஆயம் சற்று முன்னர் இந்த உத்தரவை விதித்தது.

டிசம்பர் மாதம் 5,6,7ம் திகதிகளில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.

கடந்த 09ம் திகதி விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றின் மூலம், இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் எட்டாவது நாடாளுமன்றத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலைத்திருந்தார்.

19வது அரசியலமைப்பு திருத்தத்தின் பிரகாரம், நான்கரை வருடங்களின் முன்னர் நாடாளுமன்றத்தை ஜனாதிபதியால் கலைக்க முடியாதென குறிப்பிடப்பட்டதன் பிரகாரன், ஜனாதிபதியின் வர்த்தமானி அறிவித்தலிற்கு எதிராக 17 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

த.தே.கூ, ஐ.தே.க, ஜே.வி.பி, அ.இ.ம.கா, மு.கா உள்ளிட்ட கட்சிகள், பொது அமைப்புக்கள், தனிநபர்கள் இந்த வழக்கை நேற்று (12) தாக்கல் செய்தனர். இவற்றை ஆராய மூன்று நீதியரசர்கள் குழாம் அமைக்கப்பட்டது.

இது தொடர்பான வழக்கில் நேற்று மாலை மன்றில் முன்னிலையான சட்டமா அதிபர், தனது தரப்பு சமர்ப்பணங்களிற்கு கால அவகாசம் தேவையென கோரினார். எனினும், இன்றைய தினமே அவரது சமர்ப்பணங்கள் இடம்பெற வேண்டுமென நீதிமன்றம் அறிவித்தது.

இன்று சட்டமா அதிபர் தனது தரப்பு வாதங்களை முன்வைத்தார். இதேவேளை, அரச தரப்பிலிருந்து ஐந்து மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இவற்றை ஆராய்ந்த நீதிமன்றம் பிற்பகல் 3 மணியளவில் அமர்வை இரண்டு மணித்தியாலங்களிற்கு ஒத்தி வைத்தது.

மாலை ஆறுமணிக்கு மணிக்கு நீதியரசர் குழாம் தமது தீர்ப்பை வெளியிட்டது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]