வட மாகாணத்தில் கடந்த 3 ஆண்டுகளில் காணாமல் போனோர் தொடர்பாக 62 முறைப்பாடுகள் – இலங்கை மனித உரிமை ஆணைக்குழு

இலங்கை மனித உரிமை ஆணைக்குழு

யாழ்ப்பாணம்; வடக்கு மாகாணத்தில் கடந்த 3 ஆண்டுகளில் காணாமல் போனோர் தொடர்பாக 62 முறைப்பாடுகள் பதிவுசெய்யப்பட்டுள்ளதென இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் புள்ளிவிபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாணத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல் செயற்பாடுகள் தொடர்பில் இலங்கை மனித உரிமை ஆணைக்குழு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்தவகையில், வடக்கு மாகாணத்தில் கடந்த 3 ஆண்டுகளில் ஆயிரத்து 944 முறைப்பாடுகள் உரிய முறையில் பதிவு செய்யப்பட்டு மனித உரிமை ஆணைக்குழுவால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. நாளொன்றுக்கு நூறுக்கு மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்ற போதிலும் சில முறைப்பாடுகள் உடனடியாகவே தீர்க்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் கடந்த 2015 ஆம் ஆண்டு யாழ்ப்பாண பிராந்திய அலுவலகத்தில் 315 முறைப்பாடுகளும் கிளிநொச்சி உப அலுவலகத்தில் 93 முறைப்பாடுகளும், வவுனியா பிராந்திய அலுவலகத்தில் 284 முறைப்பாடுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2016 ஆம் ஆண்டு யாழ்ப்பாண பிராந்திய அலுவலகத்தில் 219 முறைப்பாடுகளும் கிளிநொச்சி உப அலுவலகத்தில் 129 முறைப்பாடுகளும், வவுனியா பிராந்திய அலுவலகத்தில் 315 முறைப்பாடுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2017 ஆம் ஆண்டு செப்ரம்பர் மாதம் வரை யாழ்ப்பாண பிராந்திய அலுவலகத்தில் 188 முறைப்பாடுகளும் கிளிநொச்சி உப அலுவலகத்தில் 73 முறைப்பாடுகளும், வவுனியா பிராந்திய அலுவலகத்தில் 256 முறைப்பாடுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதில் முக்கியமாக 2015 ஆம் ஆண்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை தொடர்பில் 27 முறைப்பாடுகளும், பலவந்தமாக கைது செய்யப்பட்டமை தொடர்பில் 27 முறைப்பாடுகளும், காணாமல் ஆக்கப்பட்டது தொடர்பில் 22 முறைப்பாடுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

2016 ஆம் ஆண்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை தொடர்பில் 85 முறைப்பாடுகளும், பலவந்தமாக கைது செய்யப்பட்டமை தொடர்பில் 52 முறைப்பாடுகளும், காணாமல் ஆக்கப்பட்டது தொடர்பில் 20 முறைப்பாடுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கடந்த 2017 ஆம் ஆண்டு செப்ரம்பர் வரை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை தொடர்பில் 55 முறைப்பாடுகளும், பலவந்தமாக கைது செய்யப்பட்டமை தொடர்பில் 25 முறைப்பாடுகளும், காணாமல் ஆக்கப்பட்டது தொடர்பில் 20 முறைப்பாடுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]