வட கொரியா புதிய ஏவுகணை எஞ்ஜின் சோதனை: அமெரிக்க அதிகாரிகள் தகவல்

அமெரிக்க பெருநிலப் பகுதியை தாக்கும் சக்தியுடைய ஏவுகணையை உருவாக்குகின்ற தன்னுடைய முயற்சியின் ஒரு பகுதியாக, வட கொரியா புதியதொரு ராக்கெட்டை எஞ்ஜினை சோதனை செய்துள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

வட கொரியாவின் அணுசக்தி அபிலாஷைகள் தொடர்பாக அமெரிக்காவுக்கும், வட கொரியாவுக்கும் இடையில் அதிகரித்து வருகின்ற பதட்டங்களுக்கு மத்தியில் இந்த செய்தி வந்துள்ளது.

இதனை தங்களுடைய முதன்மை பிரச்சனைகளில் ஒன்றாக அதிபர் டிரம்ப் நிர்வாகம் கையாண்டு வருகிறது.

சர்வதேச கண்டனங்கள் இருந்தாலும்,, அணு ஆயதங்களை சுமந்து செல்லும் திறன் படைத்த கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து தாக்கும் ராக்கெட்டை வடிவமைக்கும் இலக்குடன் வட கொரியா தன்னுடைய ஏவுகணை சோதனைகளை அதிகரித்து வருகிறது.

வட கொரியா இந்த இலக்கை அடைவதில் இருந்து தவிர்க்க முடியாது என்று அமெரிக்க பாதுகாப்பு உளவுத்துறை நிர்வாகம் கடந்த மாதம் எச்சரித்திருக்கிறது.

வியாழக்கிழமை நடத்தப்பட்டுள்ள சமீபத்திய ராக்கெட் எஞ்ஜின் சோதனை, அமெரிக்காவை தாக்கக்கூடிய, கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து தாக்கும் பேலிஸ்டிக் ஏவுகணை தயாரிப்பின் ஒரு நிலையாக இருக்கலாம் என்று பல செய்தி நிறுவனங்களிடம் தங்களின் பெயர்களை குறிப்பிடாமல் பேசிய அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

வட கொரியாவின் ராணுவ நடவடிக்கை எல்லாம் மிகவும் ரகசியமாக இருப்பதால், கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து தாக்கும் பேலிஸ்டிக் ஏவுகணையை உருவாக்குவதில் எந்த அளவுக்கு வட கொரியா நெருங்கி வந்துள்ளது என்பதை நிபுணர்கள் மதிப்பிடுவது கடினமாக உள்ளது.

வட கொரியா ஏவுகணைகள் – நாம் அறிந்தவை

  • அமெரிக்க ராணுவம் தங்கியிருக்கக்கூடிய தென் கொரியா மற்றும் ஜப்பான், இரு நாடுகளையும் தாக்கக்கூடிய சக்தியை வட கொரிய ஏவுகணைகள் ஏற்கெனவே கொண்டுள்ளன.
  • அமெரிக்க பெருநிலப்பகுதியை சென்றடைந்து தாக்கும் ஏவுகணை சோதிக்கப்பட்டு வருகிறது. ஆனால், இந்த பணித்திட்டம் எந்த நிலையில் இருக்கிறது என்று இதுவரை தெளிவாகத் தெரியவில்லை.
  • வட கொரியா பல வெற்றிகரமான அணுசோதனைகளை நடத்தியுள்ளது.
  • ஆனால், ஏவுகணை ஒன்றில் பொருத்தும் அளவிலான சிறிய அணு ஆயுதத்தை வட கொரியா இதுவரை உருவாக்கவில்லை என்று நம்பப்படுகிறது.
வட கொரியா புதிய ஏவுகணை

அமெரிக்காவின் கூட்டாளியான தென் கொரியா வெள்ளிக்கிழமை ஏவுகணை ஒன்றை சோதனை செய்திருக்கிறது. வட கொரியாவை மிஞ்சும் அளவுக்கான வலுவான பாதுகாப்பு பின்னணியை கொண்டிருந்தால்தான் வட கொரியாவோடு பேச்சுவார்த்தை சாத்தியமாகும் என்று தென் கொரிய அதிபர் மூன் ஜியே-இன் தெரிவித்திருக்கிறார்.

தென் கொரிய ராணுவம் அணு ஆயுதங்களை கொண்டிருக்கவில்லை. ஆனால், அந்நாட்டில் தங்கியிருக்கும் அமெரிக்கப் படைப்பிரிவுகளின் வலுவான ஆதரவை அது பெற்றிருக்கிறது.

இந்த பிராந்தியத்தில் மேலும் பதட்டம் அதிகரிப்பதை தடுக்க விரும்பினால், வட கொரியா மீது, ராஜீய ரீதியில் அதிக அழுத்தங்களை சீனா பயன்படுத்த வேண்டுமென புதன்கிழமை அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ரெக்ஸ் தில்லர்சன் வலியுறுத்தியுள்ளார்.

வட கொரியாவின் முக்கிய கூட்டாளியாக சீனா பார்க்கப்படுகிறது. வட கொரியாவின் ஏவகணை சோதனைகளையும், அணுசக்தி திட்டங்களையும் நிறுத்தும் அளவுக்கு இந்த சர்வாதிகார அரசு மீது சீனா அதிக செல்வாக்கு கொண்டுள்ளது என்று அமெரிக்கா நம்புகிறது.

வட கொரியா புதிய ஏவுகணைபடத்தின் காப்புரிமைREUTERS)

வட கொரிய பிரச்சனைக்கு ராஜீய அளவில் தீர்வு காண விரும்புவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்திருக்கிறார். ஆனால், ஒரு “பெரிய, மிக பெரிய மோதல்” உருவாகும் சாத்தியக்கூறு இருப்பதாக அவர் எச்சரித்திருந்தார்,

ஒரு பரப்புரை அடையாளத்தை திருடியதற்காக வட கொரியாவில் கடுங்காவல் சிறை தண்டனை அனுபவித்து வந்த அமெரிக்க மாணவர் ஒட்டோ வோர்ம்பியர் விடுவிக்கப்பட்டு, கோமா நிலையில் வீட்டுக்கு திரும்பிய சில நாட்களில் இறந்து விட்டதால், கடந்த வாரம் மீண்டும் பதட்டம் அதிகரித்துள்ளது.

ஜப்பானோடும், தென் கொரியாவோடும் முறைப்படி ராணுவப் பயிற்சி மேற்கொண்டு வரும் அமெரிக்கா, தெர்மல் வான்வழி பகுதி பாதுகாப்பு அமைப்பு (தாட்) என்று அறியப்படும் சர்ச்சைக்குரிய ஏவுகணை பாதுகாப்பு அமைப்பை தென்கொரியாவில் நிறுவி வருகிறது.

ஆனால், சுற்றுச்சூழல் மதிப்பீடு முடியும் வரை, இந்த அமைப்பை நிறுவும் மேலதிக பணிகளை இடைநிறுத்தி வைப்பதாக தென் கொரியா சமீபத்தில் தெரிவித்திருக்கிறது.

நன்றி : பிபிசி

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]