வடமாகாண 2018 ஆம் ஆண்டிற்குரிய மூலதனச் செலவீடாக 3 ஆயிரத்து 843 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

வடமாகாண 2018 ஆம் ஆண்டிற்குரிய மூலதனச் செலவீடாக 3 ஆயிரத்து 843 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

வடமாகாண

யாழ்ப்பாணம் ; 3 ஆயிரத்து 843 மில்லியன் ரூபா 2018 ஆம் ஆண்டிற்குரிய மூலதனச் செலவீடாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சபையில் அறிவித்தார்.

வடமாகாண சபையின் 112வது அமர்வு இன்று (12.12) யாழ்.கைதடியில் உள்ள பேரவைச் செயலகத்தில் இடம்பெற்றது. ஆதன் போது, வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் 2018ம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டத்தினை சமர்ப்பித்து உரையாற்றினார்.

முதலாவது வடக்குமாகாணசபையின் ஐந்தாவதும் கடைசியுமான வரவு செலவுத் திட்டம். மத்திய அரசாங்கம் எந்த அடிப்படையில் எமக்கு உதவிகள் வழங்க முன்வருகின்றது. வடமாகாணத்தை எவ்வாறு நோக்குகின்றார்கள் தெரிந்து எமது பிரதேசத்தை வளப்படுத்த வேண்டும். விருத்தி செய்ய வேண்டும்.

வடமாகாணப் பொருளாதார விருத்தியில் எமக்கு உடன்பாடில்லை, வந்தவற்றை எடுத்தெறிகின்றோம் என்று கூறுகின்றார்கள். மத்தியில் தரகர் தட்சணை பெற்று, செயற்றிட்டங்களை உள்ளே ஏற்றுக் கொண்ட காலமும் இருந்தது. அதையே பலர் இன்னும் எதிர்பார்க்கின்றார்கள். எம்மால் முடியாதென்றவுடன் மத்தியுடன் பேசி அல்லது ஆளுநருடன் பேசி காரியத்தைச் சாதித்துக் கொள்ளப் பார்க்கின்றார்கள். எமக்கு எமது பொருளாதார விருத்தியில் ஈடுபாடில்லை என்று கதை கட்டி விடுகின்றார்கள்.

எமது மாகாண மக்களின் வருங்காலமே முக்கியம். வாழ்வாதாரங்களை நீடித்து.“பணம் வந்தால்ப் போதும்” என்ற அடிப்படையில் நன்மைகளைப் பெறுவதை நாம் ஏற்க மறுக்கின்றோம். வருமானமே வரப்பிரசாதம் என்ற கொள்கை எமது வாழ்க்கை முறையை மாற்றிவிடும். சுற்றுச் சூழலைப் பாதித்து விடும்.எமது தனித்துவத்தை நாம் தொலைத்துவிடுவோம். தனிப்பட்ட நன்மைகளைச் சிலர் பெறலாம். ஆனால் எமது ஒட்டுமொத்த வருங்காலம் பாதிப்படையும்.

எமது கலாசாரம், பண்பாடு, விழுமியங்களைக்காற்றோடு பறக்க விட்டு நாம் காசுக்காகப் பறக்க வேண்டும் என்று எம்மவர் எண்ணுகின்றார்களா? என்றும் கலாசாரம் தேவையில்லை, பண்பாடுகள் தேவையில்லை, எமது பாரம்பரியங்கள் தேவையில்லை, விழுமியங்கள் தேவையில்லை பணம் ஒன்றே முக்கியம் என்று எமது உறுப்பினர்கள் ஒட்டுமொத்தமாக ஒன்றிணைந்து பிரேரணை கொண்டுவந்து நிறைவேற்றுவார்களானால் தெற்கில் உள்ளோரைப் பிடித்து அங்கிருக்கும் அவர்களுக்குத் தேவையான செயற்பாடுகளையும், செயற்றிட்டங்களையும் இங்கு நிறைவேற்றத் தயாராக உள்ளனர்.

அதனால் எமது தனித்துவம் பறி போய்விடும். தாயகம் அழிந்துவிடும். நாங்கள் மாகாண ரீதியாகப் பெரும்பான்மையினரின் ஒரு அலகாகி விடுவோம். அந்தக் கட்டத்தில் அதனைத் தடுக்க எமக்கிருக்கும் தற்போதைய அதிகாரங்கள் போதுமானதாகாது என்பதை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். அதிகாரப் பகிர்வு கூட பெரும்பான்மையினரின் பூரண கட்டுப்பாட்டுக்குள் இருந்து கொண்டே எம்மால் அனுபவிக்கப்பட வேண்டும் என்று எதிர் பார்க்கின்றார்கள்.
ஆகவே பாரிய செயற்றிட்டங்களை நாம் இயற்றவில்லை, பொருளாதார ரீதியாக முன்னேறவில்லை என்பவர்கள் அரசியல் ரீதியாக எமக்குத் தகுந்த அதிகாரங்கள் கிடைக்கும் வரை சற்றுப் பொறுமையாக இருக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கின்றேன்.

பல்வேறு இடப்பெயர்வுகள், மீள்குடியேற்றம், தொடர்ந்த இராணுவப் பிரசன்னம், தமிழர்களின் பாரம்பரிய பகுதிகளில் பெரும்பான்மையினரின் அரச குடியேற்றங்கள் போன்ற பல்வேறு சவால்கள் ஊடாக நீண்ட கால இலக்குடன் கூடிய நிலையான அபிவிருத்தியை நோக்கியே நாங்கள் சென்று கொண்டிருக்கின்றோம் என்பதில் எமது உறுப்பினர்களுக்கு சந்தேகம் தேவையில்லை.

வடமாகாண மக்களின் கலை, கலாச்சார, பண்பாட்டு விழுமியங்களை உள்வாங்கி எமது மக்களுக்கான வாழ்வாதார நடவடிக்கைகளை அதிகரிக்கச் செய்து தேசிய ரீதியில் எமது மாகாணம் குறிப்பிடத்தக்க பங்களிப்பினை நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு வழங்கியுள்ளது என்பதை கவனத்திற்குக் கொண்டு வருகின்றேன்.

வடமாகாணம் 2016ம் ஆண்டின்மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.2 சதவிகிதப் பங்களிப்பினை செய்துள்ளது. 4.2 சதவிகிதப் பங்களிப்பில் எமது விவசாயத் துறையானது 12.6 சதவிகித பங்களிப்பினையும், கைத்தொழில்த் துறையானது 24.6 சதவிகித பங்களிப்பினையும், சேவைத் துறையானது 54.4 சதவிகித பங்களிப்பினையும், ஏனையவை 8.4 சதவிகிதப் பங்களிப்பினையும் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். சுற்றுலா உணவகங்கள் கைத்தொழில்த் துறையினுள் அடங்குவன. கல்விக் கூடங்கள், வைத்தியசாலைகள் போன்றவை சேவைத் துறையினுள் அடங்குகின்றன. 2017ம் ஆண்டின் விபரங்கள் இன்னமும் தயார்ப்படுத்தப்படவில்லை.ஆனால் அரசாங்கத்தின் தேசிய கொள்கை பிரகடனத்திற்கமைவாக 2017 ம் ஆண்டு வறுமை ஒழிப்பு ஆண்டாகவும் 2018ம் ஆண்டானது தேசிய உணவு உற்பத்தி வருடமாகவும் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.

2018 ம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்தினூடாக அரச, தனியார்துறைகளில் வேலை வாய்ப்புக்களை அதிகரிக்கக்கூடிய செயற்றிட்டங்கள் மற்றும் வருமான வாய்ப்புக்களை உருவாக்கக்கூடிய துறைகளில் முதலீடுகளை ஊக்குவித்தல், மக்களின் வாழ்வாதாரத்தினை அதிகரிக்கக்கூடிய வகையிலான பெறுமதிசேர் உற்பத்தி மற்றும் சேவைத்துறைகளுடாக வருமானத்தினை அதிகரிக்கச் செய்தல் மற்றும் கிராமிய சமூகப் பொருளாதார உட்கட்டமைப்புக்களை விருத்தி செய்தல் போன்றவற்றினூடாக மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு எமது மாகாணம் அதிகரித்த பங்களிப்பினை வழங்குவதற்கு ஏற்ற வகையில் அபிவிருத்திக்கான இலக்குகள் துறைசார் ரீதியாக இனங்காணப்பட்டுள்ளன.

ஆனால் 2016 ம் ஆண்டு நாட்டின் மொத்த வேலையற்றோர் தொகை 4.4 சதவிகிதமாக காணப்படுகையில் வடமாகாணம் ஏனைய மாகாணங்களோடு ஒப்பிடுமிடத்து ஆகக் கூடுதலான வேலையற்றோர் தொகையாக 6.3சதவிகிதத்தினைப்பதிவு செய்துள்ளது.
இலங்கையின் வறுமை நிலையினை நோக்கும் போது தலைக்குரிய வறுமைச்சுட்டி 4.1 சதவிகிதமாகக் காணப்பட்டபோதும் வடமாகாணத்திற்கான தலைக்குரிய வறுமைச்சுட்டியானது ஏனைய மாகாணங்களோடு ஒப்பிடப்படுமிடத்து ஆகக் கூடுதலான வறுமைச்சுட்டி 7.7சதவிகிதமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. வடமாகாணத்தின் வறுமை நிலையினை நோக்கும் போது 2016ஆம் ஆண்டின் தரவுகளின் பிரகாரம் நாட்டிலுள்ள 25 மாவட்டங்களிலும் வறுமை அதிகூடிய மாவட்டமாக கிளிநொச்சி மாவட்டம் அதாவது 18.2சதவிகித வறுமைக்குறிகாட்டியை பதிவு செய்து முதலாவது நிலையிலும். .முல்லைத்தீவு மாவட்டம் 12.7சதவிகிதம்பதிவு செய்து இரண்டாவது நிலையிலும் யாழ்ப்பாண மாவட்டம் 7.7சதவிகிதத்தினை பதிவு செய்து 5வது இடத்திலும் காணப்படுகின்றன. வறுமை கூடிய மாவட்டமாக இருந்த முல்லைத்தீவுவறுமையின் தாக்கம் குறைவடைந்து எமது காலத்தில் இரண்டாம் இடத்திற்கு பின்னேறியமை வரவேற்கத்தக்கது.எனினும் கிளிநொச்சி மாவட்டம் கூடிய கவனிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
வடமாகாணத்தின் நிர்வாக மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளை பயனுறுதிமிக்கதாகவும், வினைத்திறனுடையதாகவும் செயற்படுத்துவதற்கு ஆளணிகள் இன்றியமையாததாகும். வடமாகாணத்திற்கு தேவைப்படும் ஆளணிகள் தொடர்பாக சேவைப்பிரமாணக்குறிப்புக்களைத் தயாரித்து மாகாண சபைக்குட்பட்ட வெற்றிடங்களை முறையே நிரப்புவது இன்றியமையாததாகும். அந்த வகையில் அடையாளப்படுத்தப்பட்ட வெற்றிடங்கள் பல்வேறு பதவிநிலைகளிலும் நிரப்பப்பட்டுள்ளன.

இதேவேளை மத்திய அரசின் கீழ்வரும் வெற்றிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டிய தேவை உள்ளது. எனவே 2018ம் ஆண்டு மத்திய-மாகாண அரசுகளின் கீழ் இனங்காணப்பட்டுள்ள ஆளணிப்பற்றாக்குறையை நிவர்த்தி செய்வது இன்றியமையாதது.
2018 ஆம் நிதியாண்டிற்கான எமது மாகாணசபை செலவினங்களுக்காக நிதி ஆணைக்குழுவால் தேசிய பாதீட்டுத் திணைக்களத்திற்குச் சிபார்சு செய்யப்பட்ட ஒதுக்கீட்டுத் தொகை உள்ளடங்கலாக 2018 ஆம் ஆண்டின் நிதிக்கூற்றின் ஒதுக்கீட்டு தொகைகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
மீண்டுவரும் செலவினங்கள் (ரூபா.22,910.93மில்லியன்)
மீண்டுவரும் செலவினங்களுக்கான தொகை ரூபா. இருபத்திரண்டாயிரத்து எழுநூற்று எழுபது தசம் ஒன்பது மூன்று மில்லியன் (ரூபா.22,770.93மில்லியன்) ஆகும்.

இதில் மத்திய அரசால் தொகுதிக் கொடையாக ரூபா பதினெட்டாயிரத்து அறுநூற்று ஐம்பது தசம் ஒன்பது மூன்று மில்லியனும் (ரூபா.18,650.93மில்லியன்) மத்திய அரசு வருமானமாக ரூபா இரண்டாயிரத்து எழுநூற்று ஐம்பது மில்லியனும் (ரூபா.2,750மில்லியன்) மாகாணசபை வருமானமாக ரூபா எழுநூற்று ஐம்பது மில்லியனும் (ரூபா.750மில்லியன்) கிடைக்குமென எதிர்பார்க்கப்படுகின்றேன்.
உள்ளுராட்சி மன்றங்களுக்கு மாற்றுவதற்கான முத்திரைத் தீர்வைக் கட்டணம் – ரூபா நாநூற்று எண்பது மில்லியன்; (ரூபா.480மில்லியன்) நீதிமன்ற தண்டப்பணம் – ரூபா நூற்று நாற்பது மில்லியன் (ரூபா.140 மில்லியன்) உள்ளுராட்சி மன்றங்களுக்கான முத்திரைத்தீர்வைக் கட்டண மீளளிப்பு (ரூபா.140 மில்லியன்) மேலும் 2017 ஆம் ஆண்டு வரை உள்@ராட்சி மன்றங்களின் பொருட்டு சேகரிக்கப்பட்ட முத்திரைத் தீர்வைக் கட்டணத்தினை உரிய உள்@ராட்சி மன்றங்களுக்கு 2018 ஆம் ஆண்டில் மாற்றல் செய்வதற்கு நிதி ஆணைக்குழுவின் சிபார்சு ரூபா 480 மில்லியனுக்கு மேலதிகமாக ரூபா 140 மில்லியன் 2018 ம் ஆண்டு நிதிக்கூற்றில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

மூலதனச் செலவினங்கள் (ரூபா.3,843.12 மில்லியன்) மூலதனச் செலவினங்களுக்கான தொகை ரூபா மூவாயிரத்து எண்நூற்று இருபத்து மூன்று தசம் ஒன்று இரண்டு மில்லியன் ஆகும். (ரூபா.3,823.12 மில்லியன்) இதில் பிரமாண அடைப்படையிலான கொடை  – ரூபா ஐநூற்று ஐம்பத்தொன்று தசம் இரண்டு மில்லியன் (ரூபா.551.2 மில்லியன்) மாகாணக் குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்திக் கொடை  – ரூபா இரண்டாயிரத்து எண்நூற்று இருபத்தொன்பது தசம் எட்டு ஏழு மில்லியன் (ரூபா.2,829.87 மில்லியன்) பாடசாலைக் கல்வியை ஓர் அறிவு மையத்தின் அடிப்படையாக மாற்றும் செயற்றிட்டம் – ரூபா ஐம்பத்து ஐந்து மில்லியன் (ரூபா.55 மில்லியன்) சுகாதாரத் துறை அபிவிருத்திக் கருத்திட்டம் (ர்ளுனுP) – ரூபா முந்நூற்று இருபத்து நான்கு தசம் எட்டு மில்லியன் (ரூபா.324.80 மில்லியன்) வெளிநாட்டு உதவித் திட்டங்களுக்கான ஒதுக்கீடு ரூபா அறுபத்திரண்டு தசம் இரண்டு ஐந்து மில்லியன் (ரூபா.62.25 மில்லியன்) ஆகும். இதில் வடக்கு வீதி இணைப்புத்திட்டம் (மேலதிக நிதியிடல்) – ரூபா பதினேழு தசம் இரண்டு ஐந்து மில்லியன் (ரூபா.17.25 மில்லியன்) பொதுக் கல்வி நவீனமயமாக்கல் கருத்திட்டம் – ரூபா நாற்பத்தைந்துமில்லியன் (ரூபா.45 மில்லியன்) காற்றாலைத் திட்டத்தின் படி விவசாய அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும் கூட்டிணைந்த சமூகப் பொறுப்பு கொடை ரூபா.20 மில்லியன் (ரூபா.20 மில்லியன்) 2018 ஆம் ஆண்டு செயற்திட்டங்களை நிறைவேற்றுவதற்காக நிதிக்கூற்று 2018 இல் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]