வடக்கு முதல்வரின் கருத்துக்கு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் பதில்

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி

வடக்கு முதல்வரின் கருத்துக்கு ‘இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி’யின் பொதுச் செயலாளர் பதில்

‘கற்தூணாய் நொருங்குவோமன்றி, காலமறிந்து செயற்படோம்’ என்றிருப்பது தமிழர் தம் தலைவிதியாக மாறிவிடக் கூடாது என்பது என் எண்ணம். ஏற்பட்டுள்ள சூழ்நிலையைத் தவறவிடாது தமிழினம் தழைக்க ஒன்றிணைந்து செயற்படுவோம் என்றே எனது அறிக்கை அமைந்திருந்தது. ஆனால், அவரோ இல்லாததையும் பொல்லாததையும் எழுதுகின்றார். என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் தெரிவித்தார்.

வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனின் அறிக்கை தொடர்பில் இன்று (06) கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

விக்னேஸ்வரன் ஐயா எனக்குத் துரேணாச்சாரியார். நான் அருச்சுனன் அல்ல என்றாலும், ஐவரில் ஒருவன், இல்லையென்றால் ஏகலைவன். அவருக்கு அளிக்க வேண்டிய கண்ணியத்தை வழங்கி ‘உள்ளதையும் நல்லதையும்’ சொன்னேன், “விதியே விதியே தமிழச் சாதியை என் செய நினைத்தாய்” என்று நொந்தேன்.

அவர் இல்லாததையும் பொல்லாததையும் எழுதுகின்றார். “எய்தற்கரிய தியைந்தக்கால் அந்நிலையே செய்தற்கரிய செயல்” என்ற வள்ளுவம் போல், ஏற்பட்டுள்ள சூழ்நிலையைத் தவறவிடாது தமிழினம் தழைக்க ஒன்றிணைந்து செயற்படுவோம் என்றேன்.

“தண்ணீர் விட்டோ வளர்த்தோம், சர்வேசா! இப்பயிரைக் கண்ணீராற் காத்தோம் கருகத் திருவுளமோ” என்று ஏங்குவதை விட என்ன செய்ய?

நாம் முடியுடை வேந்தர் பரம்பரை. “வடவேங்கடம் முதல், தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறு நல்லுலகை” எப்படியோ சுருக்கி இன்று குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓடுகின்றோம்.

‘கற்தூணாய் நொருங்குவோமன்றி, காலமறிந்து செயற்படோம்’ என்றிருப்பது தமிழர் தம் தலைவிதியாக மாறிவிடக் கூடாது என்பது என் எண்ணம். “தீதும் நன்றும் பிறர்தர வாரா” என்கிறது புறநாநூறு.

துரோணாச்சாரியார் விஸ்வாமித்திரராக விஸ்வரூபம் எடுக்கின்றார். நான் கொக்கு அல்ல. எனினும் அவர் மீதான மதிப்பும் மரியாதையும் என்றும் உள்ளபடியே இருக்கும். இனிமேல் இது பற்றி நான் தொட மாட்டேன். தொடங்கியவரே முடிப்பவரும் ஆவார் என்ற மரபுப்படி ஐயா அவர்கள் முடித்து வைப்பதாயினும் சரி… அது அவர் திருவுளம் என்று தெரிவித்தார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]