வடக்கு மாகாண ஆளுனராக கே.சி.லோகேஸ்வரன்

வடக்கு மாகாண ஆளுனராக, தற்போது மேல் மாகாண ஆளுனராகப் பணியாற்றும் கே.சி.லோகேஸ்வரன் நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

எட்டு மாகாணங்களின் ஆளுனர்களுக்கு விருப்ப அடிப்படையில் இடமாற்றங்களை வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆளுனர் பதவியில் மூன்று ஆண்டுகள் பணியாற்றிய எட்டு மாகாணங்களின் ஆளுனர்களை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பாகிஸ்தான் பயணத்துக்கு முன்னதாக கடந்த வியாழக்கிழமை, சந்தித்துப் பேசினார்.

இதன் போது, ஆளுனர்களின் பதவிக்காலம் 5 ஆண்டுகளாக இருப்பினும், நிர்வாக சீரமைப்புகளுக்காக, ஆளுனர்களை விருப்ப அடிப்படையில் இடம்மாற்றும் யோசனை ஜனாதிபதியால் முன்வைக்கப்பட்டுள்ளது.

இதன்போது, ஆளுனர்கள் தமக்கிடையில் பேசி, தாம் பணியாற்ற விரும்பும் மாகாணம் எது என்று தெரிவிக்குமாறு கேட்கப்பட்டதாக கூறப்படுகின்றது.

இந்த மாற்றங்களுக்கமைய, மேல் மாகாண ஆளுனர் கே.சி.லோகேஸ்வரன், வட மாகாண ஆளுனராக நியமிக்கப்படவுள்ளாதாக தெரிவிக்க்படுவதுடன், அவ்வாறு நியமிக்கப்பட்டால், வடமாகாணத்தின் ஆளுனராக தமிழர் ஒருவர் நியமிக்கப்படவுள்ளது முதன் முறையாகும்.

இதேவேளை, தற்போது, வட மாகாண ஆளுனராக உள்ள ரெஜினோல்ட் குரே, மத்திய மாகாண ஆளுனராக நியமிக்கப்படவுள்ளதாகவும், ஊவா மாகாண ஆளுனர் ஜெயசிங்க, வடமத்திய மாகாணத்துக்கும், மத்திய மாகாண ஆளுனர், நிலுக்க எக்கநாயக்க, சப்ரகமுவ மாகாணத்துக்கும், சப்ரகமுவ ஆளுனர் மொர்ஷல் பெரேரா தென் மாகாணத்துக்கும் மாற்றப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், தென் மாகாண ஆளுனர் ஹேமகுமார நாணயக்கார, மேல் மாகாணத்துக்கும் வடத்திய மாகாண ஆளுனர் பி.பி.திசநாயக்க,வடமேல் மாகாணத்துக்கும் மாற்றப்படவுள்ளதுடன், ஊவா மற்றும் தென் மாகாணங்களின் ஆளுனர்களின் இடமாற்றங்கள் இன்னமும் உறுதிப்படுத்தப்படவில்லை.

இதேவேளை, கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹித போகொல்லாகம அண்மையிலேயே நியமிக்கப்பட்டவர் என்பதால், அவர் இவர் இடமாற்றம் செய்யப்படமாட்டார் என்று தகவல் வெளியாகியுள்ளது.