வடக்கு போராட்டங்கள் தொடர்பில் மைத்திரி – விக்கி விரைவில் பேச்சு

வடக்கு போராட்டங்கள் தொடர்பில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுடன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விரைவில் தனியாகப் பேச்சு நடத்தவுள்ளார்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் நடத்தி வரும் போராட்டங்கள், காணிகளை விடுவிப்புக்காக நடத்தப்படும் போராட்டங்கள் உள்ளிட்ட வடக்கின் முக்கியமான பிரச்சினைகளை அவசரமாகத் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வடக்கு மாகாண முதலமைச்சர் அண்மையில் கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார்.’

இந்த விவகாரங்கள் தொடர்பாக பேச்சு நடத்த வருமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வடக்கு மாகாண முதலமைச்சருக்கு அழைப்பு விடுத்துள்ளார். எதிர்வரும் மே 17ஆம் திகதி கொழும்பில் இந்தச் சந்திப்பு நடைபெறவுள்ளது.

தமக்கு இந்தக் கடிதம் கிடைத்துள்ளது என்பதை வடக்கு மாகாண முதலமைச்சர் உறுதிப்படுத்தியிருந்தார்.

இந்த நிலையிலேயே, வடக்கு மாகாண முதலமைச்சரை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, உதவியாளர்களின் துணையின்றி தனியாகவே சந்தித்துப் பேச்சு நடத்துவார் என்று தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

இந்தச் சந்திப்பின்போது வடபகுதி மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக ஜனாதிபதியிடம் முதல்வர் விக்னேஸ்வரன் எடுத்துக் கூறுவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

அதேவேளை, ஜனாதிபதியுடன் கலந்துரையாடப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பாக வடக்கு மாகாண முதலமைச்சர் பல்வேறு தரப்புகளுடனும் கலந்துரையாடி வருகின்றார் எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]