வடக்கு கிழக்கை நாங்கள் பிரிக்கவில்லை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் செயலாளர் பூ.பிரசாந்தன்!

நாங்கள் நினைத்தால் வடக்கு கிழக்கை இணைத்து தர முடியும் என்பதும் போலும் வடக்கு கிழக்கும் இணைக்கப்படக் கூடாது என்பதில் நாம் மாத்திரம் தான் தடையாக நிற்பது போலும் அறிக்கை விட்டு தமிழரின் அதிகாரம் மேலோங்க வேண்டிய உள்ளுராட்சி சபைகளையும் மாற்று அரசியல் தலைமைகளுக்கும், தேசிய கட்சிகளுக்கும் தாரைவார்த்து கொடுப்பதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு “நாடகமாடுகின்றதா?” என மக்கள் ஐயம் கொண்டுள்ளனர். என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தன் தெரிவித்துள்ளார்.

கட்சியின் மகளிர் அணி தலைவி செல்வி மனோகரின் தலைமையில் வியாழக்கிழமை (08) மாலை சர்வதேச மகளிர் தின நிகழ்வு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மட்டக்களப்பிலுள்ள தலைமைக் காரியாலயத்தில் நடைபெற்ற போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் நாம் என்று கூறிக் கொண்டு ஒட்டு மொத்த கிழக்கு தமிழரின் இருப்பையும் கேள்விக்குறியாக்கும் செயற்பாடுகளையே தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னெடுத்து வருகின்றது.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி மாத்திரம்தான் வடக்கு கிழக்கு இணைப்புக்கும் தமிழ் தேசிய கொள்கைக்கும் எதிராக நிற்கின்றது என்ற போலிப்பிரச்சாரத்தினை முன்னெடுக்கும் இவர்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும்.

1976ம் ஆண்டு தங்களின் அரசியல் இலாபத்திற்காக மாத்திரம் மையப்படுத்தியே வட்டுக்கோட்டையில் தமிழீழ பிரகடனத்தினை முன்வைத்தார்கள். அதனை கண்மூடித்தனமாக நம்பியே இளைஞர்கள் கையில் ஆயுதம் ஏந்தினார்கள் அந்த வழியில் தமிழரின் மண் மீட்பிற்காக ஆயுதம் ஏந்தியவர்களே எமது கட்சியின் தலைவர் சி.சந்திரகாந்தன் உள்ளிட்ட எமது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மூத்த தலைவர்கள்.

இவர்களே பல இராணுவ வெற்றிகளுக்கு காரணமாக இருந்தனர். அந்த வேளையில் வேடிக்கை பார்த்தவர்கள்; இன்று அரசியலுக்காக வெற்றுக்கோஷம் இட்டு மக்களை ஏய்த்துக் கொண்டிருப்பது தமிழ் சமுகத்தினை மேலும் அகல பாதாளத்திலேயே தள்ளிவிடும்.

01.01.2018ம் திகதி மாகாணத்திற்கு காணி பொலிஸ் அதிகாரம் கோருவோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு நாம் அழைப்பு விடுத்த போது எந்த பதிவிலும் சொல்லாதவர்கள், 2015இல் தமிழ் முதலமைச்சர் வரவேண்டும் என விட்டுக் கொடுப்புடன் நாம் சென்ற போது எம்மை உதறித்தள்ளிவிட்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிடம் முதலமைச்சை தாரைவார்த்துக் கொடுத்தவர்கள். உள்@ராட்சி சபைகளில் வியாக்கியானம் பேசி தமிழரின் அடிக்கட்டுமான இருப்பையும் தாரைவார்க்கப்போகின்றார்களா

கிழக்கு மாகாணத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிடம் முதலமைச்சை தாரைவார்த்துக் கொடுத்து இணக்க ஆட்சி நடாத்த முன்வந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒன்றை வெளிப்படுத்த வேண்டும். நூற்றுக்கணக்கான பிரேரணைகளை நிறைவேற்றிய கிழக்கு மாகாணசபை யாரை வடக்கு கிழக்கு இணைந்த தமிழ் தாயகத்தினை நாம் ஏற்றுக் கொள்கின்றோம் என்ற பிரேரணையை நிறைவேற்றியுள்ளதா? அல்லது நல்லாட்சி அரசுக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்குகின்றார்களே, எப்போதாவது வடகிழக்கு இணைந்த தாயகக் கோட்பாட்டினை ஜனாதிபதி மைத்திரிபால ஸ்ரீசேனா,பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவோ எப்போதாவது ஏற்றுக் கொண்டுள்ளோம் என குறிப்பிட்டிருக்கவில்லை என்றார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]