வடக்கு அமைச்சரவையில் இருந்து வெளியேறுகிறது தமிழ் அரசுக் கட்சி

வடக்கு மாகாணசபையின் அமைச்சரவையில் இருந்து முழுமையாக வெளியேறுவதற்கு இலங்கை தமிழ் அரசுக் கட்சி முடிவு செய்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் உள்ள இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைமையகத்தில் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தலைமையில், கட்சியின் வட மாகாணசபை உறுப்பினர்கள் நேற்று மாலை நடத்திய கூட்டத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், மற்றும் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுடன் நேற்று முன்தினம் மாலை சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.

வட மாகாணசபையின் அமைச்சரவையை மாற்றியமைப்பதற்கு முதலமைச்சருக்கு அதிகாரம் அளிப்பதற்கு இந்தச் சந்திப்பில் இணக்கம் காணப்பட்டிருப்பதாக, முதலமைச்சர் விக்னேஸ்வரன் அறிவித்திருந்தார்.

மேற்படி கூட்டத்தில், முதலமைச்சர் விக்னேஸ்வரன் அமைச்சர்கள் பற்றிய முடிவை தாமே எடுப்பேன் என்பதில் உறுதியாக இருந்தார் என்றும், தமக்கு எதிராகச் செயற்பட்ட தமிழ் அரசுக் கட்சியினரை அமைச்சரவையில் சேர்த்துக் கொள்வதில்லை என்ற பிடிவாதத்தைக் காண்பித்தார் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையிலேயே, நேற்று மாலை தமிழ் அரசுக் கட்சியின் மாகாணசபை உறுப்பினர்கள் இந்த நிலைமை குறித்து கூடி ஆராய்ந்தனர்.

இதன்போது, தற்போது தமிழர் அரசுக் கட்சியின் சார்பில் வடக்கு மாகாண அமைச்சரவையில் பங்கேற்றுள்ள சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் பதவியில் இருந்து விலகுவதென்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாணசபையின் உறுப்பினர்கள் எடுத்துள்ள முடிவுக்கு தமிழ் அரசுக் கட்சியின் மத்திய செயற்குழு அங்கீகாரம் அளித்ததும், சுகாதார அமைச்சர் பதவியில் இருந்து மருத்துவ கலாநிதி சத்தியலிங்கம் பதவி விலகுவார் என்றும் கூறப்படுகிறது.

அத்துடன், முதலமைச்சரால் மாற்றியமைக்கத் திட்டமிடப்பட்டுள்ள அமைச்சரவையில் தமிழ் அரசுக் கட்சி பங்கேற்பதில்லை என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பதவிகளை முன்னிறுத்தி நடக்கும் சர்ச்சைகளுக்குள் சிக்கிக் கொள்ளாமல் விலகியிருப்பது என்றும் தமிழ் அரசுக் கட்சியின் மாகாணசபை உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர்.

இந்த தீர்மானம் தமிழ் அரசுக் கட்சியின் மத்திய செயற்குழுவின் அங்கீகாரத்துக்காக அனுப்பப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]