வடக்கில் 131 விகாரைகள் உள்ளன. அவை தொல்பொருள் திணைக்களத்துக்குரியவைகளாக இருந்தபோதிலும் அவற்றுள் 61 விகாரைகள் மாத்திரமே பௌத்த அலுவல்கள் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்றுப் புதன்கிழமை வாய்மூல விடைக்கான கேள்வி பதில் நேரத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரண எம்.பி. எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாணத்தில் தொல்பொருள் திணைக்களத்துக்குரிய விகாரைகள் 131 உள்ளன. அதில் யாழ்.மாவட்டத்தில் 6 விகாரைகளும், வவுனியா மாவட்டத்தில் 35 விகாரைகளும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 67 விகாரைகளும், மன்னார் மாவட்டத்தில் 20 விகாரைகளும், கிளிநொச்சி மாவட்டத்தில் 03 விகாரைகளும் அமைந்துள்ளன.
இதற்கு மேலதிகமாக உறுதி செய்யப்படாத 218 தொல்பொருளியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் வடக்கு மாகாணத்தால் இணங்காணப்பட்டுள்ளதுடன், அது தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதேவேளை, வடக்கு மாகாணத்தில் விகாரைகளில் பௌத்த அலுவல்கள் திணைக்களத்தில் 61 விகாரைகள் மாத்திரமே பதிவு செய்யப்பட்டுள்ளன. யாழ்ப்பாணத்தில் 9 விகாரைகளும், வவுனியாவில் 29 விகாரைகளும், முல்லைத்தீவில் 13 விகாரைகளும், மன்னாரில் 9 விகாரைகளும், கிளிநொச்சியில் ஒரு விகாரையும் மாத்திரமே அவ்வாறு பதிவுசெய்யப்பட்டுள்ளன என தெரிவித்துள்ளார்.
Website – www.universaltamil.com
Facebook – www.facebook.com/universaltamil
Twitter – www.twitter.com/Universalthamil
Instagram – www.instagram.com/universaltamil
Contact us – [email protected]