வடக்கில் நிலவிவரும் அசாதாரண சூழ்நிலை தடுக்க சிறப்பு அதிரடிப்படை களத்தில்

வடக்கில் நிலவிவரும் அசாதாரண சூழ்நிலையை அடுத்து அங்கு சிறப்பு அதிரடிப்படையினர் களமிறக்கப்பட்டுள்ளனர்.

அண்மைய நாட்களில் நிலவிவரும் குழப்பகரமான சம்பவங்களினையடுத்தே இவர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். கடந்த சில வாரத்தில் நிகழந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் மற்றும் வாள்வெட்டுச் சம்பவங்களினால் உயிரிழப்புகளும் படுகாயங்களும் ஏற்பட்டிருந்தன. இதன் பின்னரான நாட்கள் குழப்பம் நிறைந்தனவாகவும் எதிர்ப்புக்கள் நிறைந்தனவாகவும் கடந்து சென்றுகொண்டிருக்கின்றன.

இந்த நிலையில் நேற்று முந்தினம் கொக்குவில் பகுதியில் வைத்து இனம் தெரியாத நபர்களினால் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது வாள்வெட்டுத் தாக்குதலும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தில் படுகாயமடைந்த குருநாகல் பகுதியைச் சேர்ந்த தர்மிக்க ரத்நாயக்க மற்றும் மன்னார் பகுதியைச் சேர்ந்த சுரேந்திரன் ஆகிய இளம் பொலிஸ் உத்தியோகத்தர்கள் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வாள் வெட்டுச் தக்குதலானது பொலிஸார் பொதுமக்கள் என அனைத்துத் தரப்பினர்க்கும் நிகழ்ந்துவரும் நிலையில் யாழ்ப்பாணத்தின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிட்டதா என்ற அச்ச நிலை நிலவி வருகிறது.

மேலும், நேற்றைய தினம் பொலிஸ் மா அதிபரும், நேற்று முந்தினம் இராணுவத் தளபதியும் திடீர் விஜயம் மேற்கொண்டு யாழ்ப்பாணம் வந்திருந்தனர். இவர்கள் இருவரினதும் விஜயத்தின்போது மாவட்டத்தின் பாதுகாப்புக் குறித்து பேசப்பட்டிருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையியிலேயே சம்மந்தப்பட்ட குற்றச் செயல்களைப் புரிந்துவரும் சந்தேக நபர்களை கைது செய்வதற்காக கொழும்பிலிருந்து விசேட அதிரடிப்படை களமிறக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]