வாக்காளர்களை பதிவுசெய்வதற்கான விசேட ஏற்பாடுகள் சட்டத்தின் காலஎல்லை நான்கு வருடங்களாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, அக்காலப்பகுதிக்குள் உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களை சொந்த இடங்களில் குடியமர்த்துவதற்குரிய நடவடிக்கைகளை எடுக்கப்படவேண்டும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று வாக்காளர்களை பதிவு செய்வதற்கான விசேட ஏற்பாடுகள் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர் மேலும் கூறியவை வருமாறு,
வடக்கு,கிழக்கிலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்டு வேறு பகுதிகளில் குடியிருப்பவர்களுக்கு தேர்தலில் வாக்களிப்பதற்கான உரிமை இதன்மூலம் உறுதியாகின்றது. உயர்நீதிமன்றத்தின் நிபந்தனையின்படி இதன் ஆயுட்காலம் 4 வருடங்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது கவலையை ஏற்படுத்துகின்றது.
இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றுவதற்குரிய பொறிமுறையை அரசு உரிய வகையில் இயக்காததன் காரணமாகவே இவ்வாறான சட்ட ஏற்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளது என சிலர் குறிப்பிடுகின்றனர். இதுவும் நிராகரிக்கமுடியாத கருத்தாகத்தான் இருக்கின்றது.

ஆயுதக்கலாசாரத்தினால் வடக்கு கிழக்கினை பூர்விகமாக கொண்ட மக்கள் தமது சொந்த நிலங்களை விட்டு நாட்டின் வேறு பல மாவட்டங்களுக்கு சென்றிருக்கின்றார்கள். குறிப்பாக வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களில் ஆயிரக்கணக்கானவர்கள் தமது சொந்த நிலத்திற்கு மீண்டும் திரும்பும் பாரிய எதிர்பார்ப்புடன் புத்தளம் மாவட்டத்தில் வாழ்கின்றார்கள்.
ஐ.நா.சாசனத்தின் பிரகாரம் தமது சொந்த நிலத்திற்கு திரும்புகின்ற உரிமை வலியுறுத்தப்பட்டுள்ளது.. ஆகவே இடம்பெயர்ந்துள்ள மக்களை மீண்டும் சொந்த இடத்தில் குடியேறுவதற்கான நிலைமைகளை மேற்கொள்வதோடு அவர்களின் வாக்குரிமை தொடர்பில் நெகிழ்வுப்போக்கினை கடைப்பிடிக்க வேண்டும்’ என்றார்.
Website – www.universaltamil.com
Facebook – www.facebook.com/universaltamil
Twitter – www.twitter.com/Universalthamil
Instagram – www.instagram.com/universaltamil
Contact us – [email protected]