வடக்கின் போரில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி வெற்றிகொண்டது

வடக்கின் போரில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி ஒரு விக்கெட்டால் வெற்றி பெற்று சம்பியனானது.

இரசிகர்களை இருக்கை நுனிக்கே கொண்ட இந்தப் போட்டியில் நடப்பு சம்பியன் சென் ஜோன்ஸ் கல்லூரி அணி இறுதிவரை சளைக்காமல்ல போராடியத் தோல்வியைத் தழுவியது.

வடக்கின் பெரும் போர் என வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மற்றும் சென் ஜோன்ஸ் கல்லூரி அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி
கடந்த வியாழக்கிழமை காலை ஆரம்பமானது.

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் ஆரம்பமான இந்தப் போட்டி இரண்டு கல்லூரிகளுக்கும் இடையேயான நூற்றாண்டு கடந்த 112ஆவது போட்டியாகும்.

எஸ்.தசோபன் தலைமையில் யாழ் மத்திய கல்லூரி அணியினரும் வி.ஜதுசன் தலைமையில் நடப்பு சம்பியன் சென் ஜோன்ஸ் கல்லூரியினரும் களமிறங்கினர்.
நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற யாழ் மத்திய கல்லூரி அணி தலைவர் எஸ்.தசோபன் களத்தடுப்பை தேர்வு செய்தார் முதலில் துடுப்பெடுத்தாடிய சென் ஜோன்ஸ் கல்லூரி அணி முதலாவது இன்னிங்ஸில் சகல விக்கெட்டுக்களையுமிழந்து 217 ஓட்டங்களை எடுத்தது.

பதிலெடுத்தாடிய யாழ். மத்திய கல்லூரி அணி முதலாவது இன்னிங்ஸில் சகல விக்கெட்டுக்களையுமிழந்து 328 ஓட்டங்களைக் குவித்தது.

இதன்மூலம் யாழ். மத்திய கல்லூரி அணி முதலாவது இன்னிங்ஸில் 111 ஓட்டங்களால் முன்னிலை பெற்றது.

யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரி அணி இண்டாவது இன்னிங்ஸில் சகல விக்கெட்டுக்களையுமிழந்து 219 ஓட்டங்களைப் பெற்றது.

109 ஓட்டங்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் துடுப்பெடுத்தாடிய யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி 9 விக்கெட்டுக்களை இழந்து 110 ஓட்டங்களை எடுத்து ஒரு விக்கெட்டால் வெற்றி பெற்றது.

போட்டி நிறைவடைய 2 ஓவர்கள் இருந்த நிலையில் யாழ்.மத்திய கல்லூரி அணி வெற்றிபெற்றது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]