வடகிழக்கு மாகாண இளைஞர் யுவதிகளை ஒன்றிணைத்து விரைவில் இளைஞர் மாநாடு – சீ.வி.விக்னேஸ்வரன்

சீ.வி.விக்னேஸ்வரன்

வடகிழக்கு மாகாண இளைஞர் யுவதிகளை ஒன்றிணைத்து விரைவில் இளைஞர் மாநாடு – சீ.வி.விக்னேஸ்வரன்

யாழ்ப்பாணம் ; தமிழ் மக்களின் அரசியல் கலாசார பொருளதார பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில், வடகிழக்கு மாகாண இளைஞர் யுவதிகளை ஒன்றிணைத்து, இளைஞர் யுவதிகளிடையே ஏற்பட்டுள்ள பிளவுகளை சீர்ப்படுத்தும் வகையில் இளைஞர் மாநாடு ஒன்றினை வெகு விரைவில் நடாத்த தீர்மானித்துள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

தமிழ் மக்கள் பேரவையில் இளைஞர் யுவதிகளை உள்ளடக்கிய வேலைத்திட்டம் ஒன்றினை முன்னெடுக்கப் போவதாக வடமாகாண முதலமைச்சரும், தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவருமான சீ.வி.விக்னேஸ்வரன் கடந்த வாரம் நடைபெற்ற கூட்டத்தின் போது தெரிவித்திருந்தார்.

அதன்பிரகாரம், இளைஞர் மாநாடு ஒன்றினை நடாத்துவதற்கான ஆரம்ப பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்று தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில், வடமாகாண முதலமைச்சரும், தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவருமான சீ.வி.விக்னேஸ்வரன் தலைமையில் இன்று 05 யாழ்.பொதுநூலக டோமி மண்டபத்தில் நடைபெற்றது.

இதன்போதே முதலமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். இளையோரைப் பலம் மிக்கவர்களாக ஆக்க இவ்வாறான ஒரு இளையோர் மாநாட்டை வெகுவிரைவில் தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் நடாத்த தீர்மானித்துள்ளோம்.

அந்த மாநாட்டில் எமது இளைய சமுதாயத்துடன் சேர்ந்து சில முக்கியமான விடயங்களைக் கலந்தாலோசிக்கப்படவுள்ளது.

போருக்குப் பின்னரான எமது சமுதாயம் எதிர்நோக்கும் பிரச்சனைகளை, குறிப்பாக இளைஞர் யுவதிகள் எதிர்நோக்கும் பிரச்சனைகளை முதலில் இனங்கண்டு அதன்பின் அவற்றைத் தீர்க்க என்ன நடவடிக்கைகள் முன்னெடுக்க வேண்டும்.

அரசியல் ரீதியாக சர்வதேச நியமங்களுக்கு ஏற்றவகையில் எமது உரிமைகளைப் பெற என்ன செய்ய வேண்டும் என்பதை தொடர்பாக ஆராய உள்ளோம்.

அடுத்து எமது சமுதாயம் நிலைதடுமாறி, தவறி, பிறழ்வாக நடக்க எத்தனிக்கும் போது நாம் எவ்வாறு அவர்களைத் திரும்பவும் ஒழுக்க விழுமியங்கள் நிறைந்த ஒரு கட்டுக்கோப்புக்குள் கொண்டுவர முடியும்.

எமது தற்போதைய அரசியல் கலாச்சாரத்தை சீரமைப்பது எவ்வாறு என இளைஞர் யுவதிகளை எல்லாத் துறைகளிலும் வலுப்படுத்தல் எவ்வாறு என்று ஆராயப்படவுள்ளது. அரசியல் ஞானம் பெற்று தற்போதைய அரசியல் கலாச்சாரத்தை மாற்றி அமைத்து எவ்வாறு எமது இனம் முன்னேற்றங்காண வேண்டும்.

போருக்குப் பின்னர் எடுத்துக் கொண்ட அரசியல் நகர்வுகள் மற்றும் தமிழ் மக்களின் நீண்ட கால அபிலாஷைகளை பூர்த்தி செய்யக்கூடிய விதத்தில் எமது அரசியல் நகர்வுகள் இருந்துள்ளனவா என்று ஆராயவுள்ளோம்.

எமது இளைஞர் யுவதிகள் அடுத்த தலைமுறைத் தலைவர்கள் என்ற விதத்தில் அவர்களுக்குப் போதுமான அரசியல் அறிவு, நிர்வாகச் செயல்த்திறன், நிதி முகாமைத்துவம் பற்றி போதிய அறிவை அவர்கள் பெற நாங்கள் இதுவரையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டனவா என்பது தொடர்பாகவும் ஆராயப்படவுள்ளதுடன், அவ்வாறான வழிமுறைகள், பொறிமுறைகள் தயாரிக்காதபடியால்த்தான் தமிழ் மக்கள் பேரவையை உண்டாக்க வேண்டிய கட்டாயம் எமக்கு ஏற்பட்டது என்று எமது இளைஞர் சமுதாயத்திற்கு தெளிவுபடுத்தப்பட வேண்டும்.

அத்துடன், தமிழ் மக்களின் அரசியல் என்பது பின்வரும் விடயப் பரப்புக்களை கொண்டிருக்கவேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு. அதன்பிரகாரம் பின்வரும் விடயங்கள் பற்றி ஆராய்ந்து அடுத்த கட்ட நகர்வுகளை நோக்கிய பயணிக்கவுள்ளோம்.

ஒன்று எமது நோக்குகளும் அபிலாசைகளும் அடையாளப்படுத்தப்பட வேண்டும். அவற்றில் எமக்கு நம்பிக்கை இருக்க வேண்டும். நம்பிக்கை உண்டாக்கப்பட வேண்டும். தேர்தல் விஞ்ஞாபனங்களில் எமது அபிலாசைகளை உள்ளடக்கிவிட்டு “அவை ஏட்டுச்சுரக்காய்; சமைக்க உதவாது” என்ற கருத்திற்கு அமைவாக இருந்தால், எம் மக்களின் விடிவுக்கு நாம் வழி அமைக்கமுடியாது.

எனவே, அடையாளப்படுத்தப்பட்ட எமது அபிலாசைகளை அடைய நாம் என்ன செய்ய வேண்டும் என்பது பரிசீலிக்கப்பட வேண்டும். பெரும்பான்மையினர் வலுவுற்றவர்களாக இருக்கின்றார்கள். அவர்களுக்கு எதிராகப் போராட முடியாது. ஏதோ கிடைப்பதை சற்று வலுவாக்கி எடுத்துச் செல்வோம் என்று எமது அரசியல் தலைவர்கள் நினைத்திருந்தால் அவ்வாறான சிந்தனைகள் சரியா தவறா என்பது பற்றி ஆராயவேண்டும்.

எமது அரசியல் கலாசாரம் ஒரு நேர்மையான அரசியல் கலாசாரமாக மாற்றமடைய என்ன செய்ய வேண்டும் என்று ஆராயப்படவுள்ளது. எமது இளைஞர் யுவதிகள் இந்த அரசியல் பவனியில் ஒன்றிணைய எதைச் செய்ய வேண்டும். நேர்மையான அரசியலொன்றை எடுத்துச் செல்வதானால் நாம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதைப் பற்றியும் எமது சமுதாயத்தில் ஒட்டிக்கொண்டிருக்கும் சில தீய பழக்கங்களை நாம் கைவிட என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றியும் சிந்தித்துச் செயலாற்றவுள்ளோம்.

கல்வி மேம்பாட்டை ஏற்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் எமது ஆராய்ச்சிக்கு உட்படும். எமது சமுதாயம் பொருளாதார அபிவிருத்தி அடைய நாம் என்ன வேண்டும் என்பதை ஆராய இருக்கின்றோம். அடுத்து சமூகப் பிறழ்வுகளை எவ்வாறு ஒன்றுபட்டு களைய முடியும் என்பதை ஆராய்வோம்.

எமது இளைஞர் மகாநாட்டில் எமது வடகிழக்கு மாகாணங்களில் மாவட்டங்கள், பிரதேசங்கள் தோறும் இளைஞர் அணிகளை உருவாக்குவது பற்றி ஆராய இருக்கின்றோம். அடுத்து அடையாளப்படுத்தப்பட்ட மக்கள் பிரச்சனைகளை இந்த இளைஞர் அணிகள் எவ்வாறு தீர்க்கலாம் என்பது பற்றி கலந்துரையாடி தீர்வுகளை எட்ட எண்ணியுள்ளோம்.

எமது இளைஞர் யுவதிகள் தலைமைத்துவப் பண்புகளை வளர்த்தெடுக்க வேண்டும் என்பதே எமது கரிசனை.

அரசியல், பொருளாதாரம், சமூக முன்னேற்றம் ஆகியவற்றில் ஒரு மறுமலர்ச்சியை கொண்டுவந்து இளைஞர் யுவதிகளை அந்த மறுமலர்ச்சிக்கான மையங்களாக மாற்ற வேண்டும். ஆகவே போருக்குப்பின்னரான எமது தமிழ் மக்களின் பிரச்சனைகளை ஆராய்தல், இளைஞர் யுவதிகளின் நடைமுறைப்பிரச்சனைகளை ஆராய்தல், தற்போதைய அரசியல், சமூக, பொருளாதார நிலையை ஆராய்தல், ஆராய்ந்து அடையாளம் காணப்படும் பிரச்சனைகளை எவ்வாறு தீர்த்தல், நீண்ட காலத்திட்டங்களை இதற்காக வகுத்தல், எமது இளைஞர் யுவதிகள் விழிப்போடு நடந்துகொள்ள வழிமுறைகளை ஆராய்ந்து பகிர்ந்து கொள்ளல், தமிழர்தம் விழுமியங்களையும் பாரம்பரியங்களையும் எமது இளைய சமுதாயத்தின் மனதில் உறைய வைத்தல் உள்ளிட்ட பல விடயங்கள் ஆராய்ந்து செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளதாக வடமாகாண முதலமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]