வசிக்கும் வீடு பேப்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் நிதியில் வாங்கப்பட்டது என்பது எனக்குத் தெரியாது

தான் 9 மாதங்களாக வசித்துவரும் வீடு, அர்ஜூன அலோசியஸ்ஸின் பேப்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் நிதியால் கொள்வனவு செய்யப்பட்டது என்பது தனக்குத் தெரியாது என்று வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் அண்மையில் இது பற்றி கேள்வி எழுப்பட்டதையடுத்தே அது குறித்து தனக்குத் தெரியவந்தது எனவும் ரவி கருணாநாயக்க கூறியுள்ளார்.

பிணைமுறி மோசடி தொடர்பில் விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழு நேற்றைய தினமும் தமது விசாரணைகளை முன்னெடுத்தது.

மேற்படி விசாரணைக்குழுவில் உயர்நீதிமன்ற நீதியரசர் கே.டி. சித்திரசிறி, பி.எஸ். ஜயவர்தன மற்றும் ஓய்வுபெற்ற பிரதி கணக்காய்வாளர் நாயகம் வேலுப்பிள்ளை ஆகியோர் அங்கத்தவர்களாக இருக்கின்றனர்.

முற்பகல் 10.20 மணியளவில் ஆணைக்குழு அலுவல வளாகத்துக்கு வருகைதந்த அமைச்சர் ரவிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அவரது ஆதரவாளர்களும், ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை எம்.பிக்களும் அணிதிரண்டிருந்தனர். வெற்றிக்கோஷத்துடன் ரவியை உள்ளே அனுப்பிவைத்தனர்.

130 மில்லியன் ரூபா பெறுமதியான வீட்டை வாடகைக்கு வழங்க முற்பட்டபோது அதை தாமாகவே முன்வந்து பேப்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் தலைவர், ரவி கருணாநாயக்கவுக்கு வாங்கிக்கொடுத்தார் என ஈஸ்ட் வெஸ்ட் தனியார் நிறுவனத்தின் பணிப்பாளர் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் அண்மையில் சாட்மியமதித்திருந்தார்.

“குறித்த வீட்டை அரசியல்வாதியொருவருக்கு வாடகைக்கு வழங்குவதற்கு வீட்டு உரிமையாளர் விரும்பவில்லை. அதன்காரணமாகவே எமது குடும்பத்துடன் நெருங்கிய தொடர்பைப் பேணிவரும் அர்ஜூன் அலோசியஸ் அவரது நிறுவனத்தின் ஊடாகப் பணத்தைச் செலுத்தியுள்ளார்” என்று இதன்போது அமைச்சர் ரவி கருணாநாயக்க கூறியுள்ளார்.

“இந்தக் கொடுக்கல் வாங்கலுடன் நான் எந்த விதத்திலும் தொடர்புபடவில்லை. எனது மனைவியும், மகளுமே குறித்த வீட்டை வாடகைக்கு எடுத்தனர். இது பற்றி எனக்கு எதுவுமே தெரியாது” என்றும் அமைச்சர் ஆணைக்குழு முன்னிலையில் குறிப்பிட்டார்.

இதற்கிடையில் இது விடயம் குறித்து சட்டமா அதிபர் திணைக்களத்தின் சார்பில் ஆஜராகியிருந்தவரும், விசாரணைக்குழுவின் நீதிபதிகளும் பலகோணங்களில் இடையீட்டுக் கேள்விகளைத் தொடுத்தனர்.

அத்துடன், அலோசியஸ் அனுப்பியுள்ள குறுந்தகவல்கள் பற்றியும் அதில் பயன்படுத்தப்பட்டுள்ள ‘பி.எம்.’, ‘ஆர்.கே.’, ‘கே.ஆர்’ ஆகிய சொற்பதங்கள் பற்றியும் இதன்போது கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.

மாலை 3.30 மணியளவில் விசாரணைகள் நிறைவுக்கு வந்தன.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]